பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
83

அழியாத கன்னிகை

என்பது சிலப்பதிகாரம்.

     "கொதியாது கொதித்தெழுந்த!
     கோட்டெருமைத் தலையின்மிசை
     மிதியாத சீறடி மிதித்தனபோல் தோன்ற"

என்பது ஒரு பழம் பாடல்.

அந்தரி என்பது அம்பிகையின் திருநாமம், அந்தரம் என்பது ஆகாசமாதலின் ஆகாச வடிவினள் என்னும் பொருள் உடையது அது; வானந்த மான வடிவுடையாள் என்று இவ்வந்தாதியில் வரும்.

மகிஷாசுர மர்த்தனியாகிய துர்க்கையின் கோலத்தை நினைந்தவுடன்,

     நீலி

என்று கூறுகிறார். நீலி என்பது துர்க்கையின் பெயர்: காளி என்றும் கூறலாம்.

     "சங்கரி அந்தரி நீலி"

என்பது சிலப்பதிகாரம்.

நீல நிறத்துடன் மகிஷாசுர மர்த்தனியாக நின்ற அம்பிகையின் திருக்கோலத்தை எண்ணியவர், எல்லாப் பொருளும் அழிந்தாலும் தான் அழியாத கன்னிகையாக இருப்பதை நினைக்கிறார்.

அழியாத கன்னிகை.

அம்பிகை உலகத்துக்கெல்லாம் அன்னையாயினும் அவள் என்றும் கன்னிகையாக இருப்பவள். அவள் அழியாதவள்; அவள் கன்னித் தன்மையும் அழியாதது. ஆதலின் அழியாத கன்னிகை என்பதற்கு அழியாதவளாகிய கன்னிகை என்றும், அழியாத கன்னித் தன்மையுடையவள் என்றும் பொருள் கொள்ளலாம்.