பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84

அபிராமி அந்தாதி

     "கனிகையுமை"

(திருப்புகழ்)

     "அகிலாண்ட கோடி யீன்ற
     அன்னையே பின்னையும் கன்னியென மறைபேசும்
     ஆனந்த ரூப மயிலே"

(தாயுமானவர்)

என்னும் திருவாக்குகள் இங்கே நினைப்பதற்குரியவை.

பிரமன் தருக்கு மிக்கவனாக இருந்தான்; எனக்கும் ஐந்து தலை; சிவனுக்கும் ஐந்து தலை என்று ஒப்பு நோக்கி இறுமாப்படைந்தான். அப்போது சிவபிரான் அவனுடைய தலை ஒன்றைக் கிள்ளி அந்தக் கபாலத்தையே பிச்சை வாங்கும் கலனாகக் கொண்டான். சிவபிரான் செயல்கள் யாவும் அம்பிகையாகிய சக்தியின் செயலாகக் கொள்வத்ற்கு உரியவை. அவனுக்கும் அவளுக்கும் வேறுபாடு இல்லை. ஆதலின் அம்பிகையும் கையில் பிரமகபாலம் தரித்திருப்பாள்.

ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள்.

'மறையை ஒதும் பிரமனுடைய தலையைத் தாங்கிய கையை உடையவள்' என்பது இதன் பொருள். கம்-தலை; இங்கே கபாலம்.

பிரமன் யாவருக்கும் பிறப்பைத் தருபவன். அவன் ஜீவர்களின் தலையில் எழுதுகிறான் என்று சொல்வது ஒரு வழக்கு. எல்லாருடைய தலையிலேயும் எழுதுபவனது தலையையே திருப்பிப் பிடித்திருக்கிறாள் அன்னை. இது, தன்னை நம்பும் அடியார்களுக்குப் பிறப்பினால் வரும் இடும்பையைத் தீர்ப்பவள் என்பதைப் புலப்படுத்தும் திருக்கோலம். பிறப்பை நினைப்பூட்டும் பிரமனன் அடர்த்து அவன் கபாலத்தைக் கையில் வைத்திருப்பது, பிறப்பின் காரணத்தையே அழித்து மாற்றுபவள் அன்னை என்பதைக் குறிக்கும் கோலமாகும்.