பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
85

அழியாத கன்னிகை

'பலிகொள் கபாலி'

என்று திருப்புகழும்,

'சிவஞான போதகி செங்கைக் கபாலி'

என்று வராகி மாலையும் அம்மை தன் கையில் கபாலம் உடையவளாக இருப்பதைக் கூறுகின்றன.

தேவருக்குத் துன்பம் செய்த மகிடன் தலையைக் காலால் மிதித்தும், தருக்குற்ற பிரமன் தலையைக் கையால் எடுத்தும் தன் திறமையைக் காட்டும் பெருமாட்டியை நாம் தியானிக்க வேண்டும். தீங்கு புரிவோருக்குக் கொடுமை புரிந்து காளியாக நின்றாலும், அவள் சுந்தரி. அவளுடைய திருவடி, மலர் போன்ற மென்மையையுடையது; அதனை நாம் நம் உள்ளத்திலே வைத்துத் தியானிக்க வேண்டும். அபிராமிபட்டர் எடுத்தவுடன் சுந்தரி என்று சொல்லிவிட்டு, அன்னையின் பராக்கிரமங்களை நினைவூட்டி, பின்பு அவளுடைய தாள் மலரைச் சுட்டிக் காட்டி, அவை என் கருத்திலே உள்ளன என்று முடிக்கிறார். இத்தனை புகழையும் பிரதாபத்தையும் வாயாரப் பாடி அச்சத்தைப் போக்கிக் கொள்கிறார். பிறகு அவள் திருவடி மலர்களையே இடைவிடாமல் உள்ளத்தே பதித்து நலம் பெறுவதைச் சொல்கிறார்.

சுந்தரி, எங்தை துணைவி, என்
பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தி
னாள்,மகி டன்தலைமேல்
அந்தரி,நீலி,அழியாத
கன்னிகை,ஆரணத்தோன்
கம்தரி கைத்தலத் தாள்,மலர்த்
தாள் என் கருத்தனவே.