பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60


எல்லைக்குள்ளேயே வர விடாமல் தடுப்பதற்கு மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. நம் காட்டில் மொத்தம் முந்நூறு யானைகள் உள்ளன. இந்த முந்நூறு யானைகளையும் அடுத்த காட்டின் எல்லையிலேயே வரிசையாக நிறுத்தி வைத்தால் சின்னஞ் சிறிய விலங்குகள் தொலைவிலேயே பயந்து திரும்பி ஓடி விடும். மீறி வருபவற்றை நம் வீர யானைகள் துதிக்கையால் பற்றித் தூக்கி மரங்களில் அடித்து மோதிச் சின்னாபின்னமாக்கி விடும், மிக எளிதில் நாம் வெற்றி பெறலாம் " என்று கூறியது.

அடுத்த அமைச்சராகிய பரிப்பெருமாள் என்ற குதிரையார் தம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தம் கருத்தைக் கூறலானார்.

"மன்னருக்கு மன்னனே, மாவீரனே, சிங்க வேந்தே, உன் பொன் அடிக்கு வணக்கம். நம் காட்டில் உள்ள குதிரைகள் எண்ணிக்கை மொத்தம் 925 ஆகும். இவற்றில் சின்னஞ் சிறுசுகள், நோய் நொடி உற்றவை, நொண்டிகள் ஆகியவற்றைத் தள்ளி விட்டால் எண்ணுறுக்குக் குறையாமல் இருக்கின்றன. அத்தனை குதிரைகளும் போர்ப்பயிற்சி மிக்கவை. தாங்கள் உத்தரவிட்டால் இப்பொழுதே நான் சென்று எல்லாக் குதிரைகளையும் அழைத்துக் கொண்டு அடுத்த காட்டின் மீது படையெடுக்கிறேன். வெற்றி நமதே, விடை கொடுங்கள்" என்று கூறியது.