பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62


வலிவு மிக்க விலங்குகள் அனைத்தையும் திரட்டிப் போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். எதிரி எந்த நேரத்தில் நுழைந்தாலும் விரட்டியடிக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.’’

நான்கு அமைச்சர்களும் கூறிய கருத்துக்களைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிந்த் சிங்கமா மன்னர், ஒரு சிறிய உறுமலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"எங்கே அந்தக் குட்டிப் பயல்?’'என்று கேட்டுக் கொண்டே சின்ன முயல் எங்கே இருக்கிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தார்.

"அரசே, இதோ இருக்கிறேன்!” என்று கூறிக் கொண்டே முன்னால் தாவி வந்தது முயல்.

"நான்கு அமைச்சர்களும் தங்கள் கருத்தைச் சொல்லி விட்டார்கள். நீ என்ன சொல்லுகிறாய்;" என்று அலட்சியமாகக் கேட்டது சிங்கம்.

"மன்னர் பெருமானே, போர் இல்லாத காலத்திலேயே உணவுக்காகவென்றும் மனிதர்கள் வேட்டையாடுவதாலும் நம்முடைய விலங்கு இனங்கள் நாள் தோறும் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் போர் ஒன்று தோன்றுமானால் இரண்டு பக்கத்திலும் ஏராளமான விலங்குகள் தேவை யில்லாமல் கொல்லப்படும்; இந்தப் போரைத் தவிர்த்து நம் விலங்கு இனங்கள் பூண்டோடு அழியாமல்பார்த்துக் கொள்ள வேண்டியது தங்களைப்போன்ற மேலான அரசர்களின் கடமையாகும்.