இரங்கூன் நகரிலிருந்து கிழக்கே சென்றால் ஒரு பெரிய காடு இருக்கிறது. அந்தக் காட்டில் ஒரு குட்டி முயலுக்கு ஒரு முறை பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் அன்று அதன் அம்மா ஒரு பெரிய விருந்து வைத்தது. அந்த விருந்துக்கு வந்த பல முயல்கள் வகை வகையான இலைகளையும் குழைகளையும் பரிசாகக் கொண்டு வந்து கொடுத்தன. குட்டி முயலின் அம்மாவுக்கு ஏராளமான உறவினர்கள் இருந்ததால் பல பகுதிகளிலிருந்து முயல்கள் வந்து வாழ்த்துக் கூறின.
ஷான் நாட்டிலிருந்து வந்த சின்ன முயல் ஒன்று குட்டி முயலுடன் அன்பாகப் பழகியது. இரண்டும் நண்பர்களாகி விட்டன. விருந்தெல்லாம் முடிந்தபிறகு ஷான் நாட்டு முயல், குட்டி முயலைப் பார்த்து உங்கள் காடெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் வருகிறாயா என்று கேட்டது. குட்டி முயலும் அம்மாவிடம் ஒப்புதல் பெற்றுக் கொண்டு அந்த வெளியூர் முயலுடன் புறப்பட்டது.
காட்டுப் பகுதிகளையெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு இரண்டு முயல்களும் துள்ளிப் பாய்ந்து ஓடின. கால்வாய்களைக் கடக்க ஒரு தாவல். கரும்புத் தோட்டங்களின் இடையே ஒரு துள்ளல். நெல் வயல்களின் ஊடே ஒரு ஒட்டம். காட்டு மரங்களின் நடுவில் ஒரு ஆட்டம். புதர்களைத் தாண்டி ஒரு பாய்ச்சல். இப்படியாக அவை போட்ட ஆட்ட பாட்டங்களுக்கு அளவில்லை,