உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


குட்டி முயல் நினைத்த செயலை முடிக்காமல் தூங்காது போல் இருந்தது. சிறிதுகூட அயராது அது துள்ளிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அது உச்சி சென்று சேர்ந்த நேரம் இருட்டி விட்டது.

உச்சியில் நின்று அந்தக் குட்டி முயல் சுற்று முற்றும் பார்த்தது. மலையடிவாரத்தில் இருந்த பெரிய பெரிய மரங்களெல்லாம் சின்னச் சின்ன செடிகள் போல் காட்சியளித்தன. ஏரி, குளங்களெல்லாம் சிறிய, சிறிய பள்ளங்கள் போல் தோன்றின. கிழக்குப் பக்கத்தில் இருந்த கடல் ஓர் ஏரியைப் போல் காட்சியளித்தது. அப்பொழுது கடலின் அடி மட்டத்திலிருந்து வெள்ளை நிறமான ஓர் அப்பம் வெளிவந்தது.

அந்த அப்பத்தைப் பார்க்க பார்க்கக் குட்டி முயலுக்கு அதைக் கடித்து தின்ன வேண்டும்போல் இருந்தது. உடனே கீழ் நோக்கிப் பாய்ந்தது. சிறிது தொலைவு கீழே இறங்கியவுடன் கிழக்குத் திசையில் திரும்பிப் பார்த்தது. அந்த அப்பம் மேலே வந்து கொண்டிருந்தது. கடலில் தோன்றி வந்த நிலவைத்தான் குட்டி முயல் அப்பம் என்று நினைத்தது.

அப்பம் மேலே வந்து கொண்டிருக்கிறது. அது அருகில் வந்த உடன் பிடித்துத் தின்னலாம். ஏன் கீழே இறங்க வேண்டும். இவ்வாறு எண்ணிய குட்டி முயல் அந்த இடத்திலேயே நின்று மேலே வரும் அப்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.