பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதற் கனல் 15

கங்காதேவிக்கும் கூந்தல் இருக்கத்தான் இருக்கும். அத்தகைய கூந்தல் உடையவளைத் தன் சடாபாரத்தில் மறைத்து வைத்திருக்கிறான் இறைவன்.

திருமுடியிலே குளிர்ந்த கங்கையை வைத்துள்ள பெருமான் தன் திருக்கரத்திலே வெம்மையான அக்கினியை ஏந்திக் கொண்டு கோலம் காட்டுகிறான். ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட பொருள்கள் பல அவனிடத்தில் வேறுபாடின்றி விளங்குகின்றன. தண்மையான பொருளாகவும் வெம்மையான பொருளாகவும் இருப்பவன் அவன். அவனிடம் இப்படி மாறுபட்ட பொருள்கள் தெய்வத் தன்மை பெற்று விளங்குகின்றன. திருமுடியில் உள்ள தண்மையான கங்கையும் திருக்கரத்திலுள்ள வெம்மையான அழலும் இந்த உண்மையைப் புலப் படுத்துகின்றன.

அழற்கு அங்கை ஏந்த வல்லானும்.

இவ்வாறு காட்சி அளிக்கும் பெருமானாகத் திருவாரூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைக் காண்கிறார் அப்பர் சுவாமிகள்.

குழற்கங்கையாளை உள் வைத்துக்
கோலச் சடைக் கரந்தானும்,
அழற்கங்கை ஏந்த வல்லானும்
ஆரூர் அமர்ந்த அம்மானே.

இயல்பாக மாறான தன்மையுள்ள பொருள்கள் இறைவனைச் சார்ந்த பிறகு யாவும் சிவமயமாகின்றன. உலகியலில் ஈடு பட்டு வெவ்வேறு நுகர்ச்சிகளைப் பெறும் பொறிகளும் கணத்துக்குக் கணம் எங்கெங்கோ ஒடித் திரியும் மனமும் இறைவனுடைய தொடர்பு பெற்றுவிட்டால் யாவும் இறைமயமான உணர்விலே ஒன்றி நிற்கும். இதைப் பசுகரணங்கள் பதி கரணங்களாக மாறுவது என்று சாத்திரங்கள் கூறும்.

ஆரூரில் எழுந்தருளியிருக்கும் தனித்தலைவருகிய எம்பெருமானிடத்தில் ஈடுபட்ட பொறிகளும் மனமும் தம் இயல்புகள்