பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறைவன் வடிவங்களும் திருநாமங்களும் 21


இப்போது அப்பர் சுவாமிகள் தம் கண்களை நிமிர்த்திப் பார்க்கிறார். இறைவனுடைய திருத்தோள்கள் காட்சி அளிக்கின்றன. அவை பொன்னிறம் பெற்றுப் பொலிந்து தோன்றுகின்றன; பொன்மலையே தோளாக வடிவெடித்து அமைந்ததேள் என்று எண்ணும்படி திண்மையனவாகவும் அழகுடையனவாகவும் இலங்குகின்றன.

ஆயிரம் பொன்வரை போலும்
     ஆயிரம் தோள் உடையானும்.

தாளும் தோளும் கண்ட திருநாவுக்கரசர் இப்போது அவனுடைய முடிகளைக் காண்கிறார். அடி, நடு, முடிவு என்ற முறையில் அவர் உண்முகப் பார்வை செல்கிறது. சேவடி யாகிய அடிநிலையையும் தோள்களாகிய இடைநிலையையும் தரிசித்தவர் இப்போது முடிநிலையாகிய திருமுடிகளில் தம் கண் களைப் பதிக்கிறார். திருமுடியைக் கண்டாலும் அதன் எல்லையைக் காண முடிவதில்லை. தலையின்மேல் அணிந்திருத்தலால் முடி தெரிகிறது.ஆனல் அதை முடியக் காணலாம் என்று முயன்றாலோ அது நீண்டு கொண்டே போகிறது. சூரியனைப்போல ஒளி வீசும் அந்த முடியின் முடிவைக் காண யாரால் முடியும் ?

“போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே”

என்பது திருவாசகம். கதிரவனைப்போல ஒளிவிட்டு விளங்கினாலும் அதை முற்றும் காண முடிவதில்லை. அப்பாலுக்கு அப்பாலாக இருக்கும் முடிகள் அவை. அவன் ஆயிரம் திருவடிகளும் ஆயிரம் திருத்தோள்களும் கொண்டது போல ஆயிரம் தலைகளும் உடையவனாக இருக்கிறான்; ஆயிரம் முடிகளை அணிந் திருக்கிறான்.

ஆயிரம் ஞாயிறு போலும்
    ஆயிரம் நீள் முடியானும்.

அடி, தோள், முடி என்று அவனுடைய திருவுருவத்தின் மூன்று எல்லைகளைப் பற்றிச் சொன்ன சுவாமிகள் இப்போது