பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அப்பர் தேவார அமுது


அவன் திருநாமங்களை எண்ணிப் பார்க்கிறார். ஒரு வடிவம் உடையவனே பல பெயர்களுடன் உலவுவதை உலகில் பார்க்கிறோம். அளவுக்கு அகப்படாத வடிவமுடையவனுக்கு நாமங்களும் அளவுக்கு அகப்படாமல் உள்ளன. உருவம் பல எடுத்துக் கொண்டருளுவதைப் போலவே திருநாமங்கள் பலவற்றையும் அவன் ஏற்றுக்கொண் டிருக்கிறான்; இன்னும் புதிய புதிய திருநாமங்களை அன்பர்கள் படைத்துச் சொன்னாலும் அவற்றையும் ஏற்றுக்கொள்கிறான். தனக்கென்று ஒரு வடிவம் இல்லாமையால் பல வடிவங்களை மேற்கொள்வதைப் போல, தனக்கென்று ஒரு நாமம் இல்லாமையால் பல பல திருநாமங்களை ஏற்றுக்கொள்கிருன்.

"ஒருநாமம் ஓருருவம்
    ஒன்றும்இலாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம்
    தெள்ளேனம் கொட்டாமோ"

என்று பாடுவார் மணிவாசகர்.

இறைவனுக்கு அருச்சனை செய்யும்போது அஷ்டோத்தரம். என்றும் சகசிரநாமம் என்றும் அருச்சனை செய்வதுண்டு. ஒவ்வொரு மூர்த்திக்கும் தனித்தனியே சகசிரநாமம் இருக்கிறது. ஒரே மூர்த்திக்கு வெவ்வேறு சகசிரநாமங்களும் உண்டு. பெரிய தலங்களில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்குத் தனித், தனிச் சகசிரநாமங்கள் வழங்குகின்றன. கணபதிக்குப் பொதுவாக ஒரு சகசிரநாமம் உண்டு; அதையல்லாமல் ககார சகசிர நாமம் என்று ஒன்று தனியே இருக்கிறது. இப்படி உள்ளவற்றைப் பார்த்தால் பல சகசிரநாமங்கள் இருப்பது தெரியவரும். அவற்றையெல்லாம் இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.

ஆயிரம் பேர் உகந்தானும்.

இவ்வாறெல்லாம் இறைவனுடைய பல அங்கங்களையும் பல திருநாமங்களையும் எண்ணி வியந்து நிற்கும் நிலை அப்பர் சுவாமிகளுக்குத் திருவாரூரில் உள்ள தியாகராசப் பெருமானத்