பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறைவன் வடிவங்களும் திருநாமங்களும்

23


தரிசித்தபோது உண்டாகிறது.அங்கே அப்பெருமான் அமர்ந்த படி காட்சியளிக்கிறான், இருந்தபடியே நடனமாடுவதால் அவனுக்கு இருந்தாடழகன் என்ற திருநாம்ம் அமைந்தது. அவ்வாறு ஆரூரில் அமர்ந்த அம்மானைத் தரிசிக்கும்போது எம்பெருமானுடைய பல திருவுருவங்களையும் பல திருநாமங்களையும் எண்ணி, இவ்வாறெல்லாம் அளவு காண முடியாத எம்பெருமான், தன் அளவற்ற திருக்கருணையினால் அடியார்கள் தரிசித்து இன்புறும்படி, இங்கே அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறானே' என்று வியந்து பாராட்டுகிறார்.

ஆயிரம் தாமரை போலும்
    ஆயிரம் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும்
    ஆயிரம் தோள் உடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும்
    ஆயிரம் நீள்முடி யானும்
ஆயிரம் பேர்உகர் தானும்
    ஆரூர் அமர்ந்த அம் மானே

*திருவாரூரில் இருந்த கோலத்தில் எழுத்தருளியிருக்கும் இந்தப் பெருமானே, ஆயிரம் தாமரை மலர்களைப் போன்ற ஆயிரம் சிவந்த திருவடிகளை உடையவனும், ஆயிரம் பொன் மலைகளைப் போன்ற ஆயிரம் திருத்தோள்களை உடையவனும், ஆயிரம் கதிரவர்களைப்போல ஆயிரமாக உயர்ந்த திருமுடிகளை உடையவனும், ஆயிரம் திருநாமங்களை உவந்து ஏற்றுக் கொண்டவனும் ஆவான்.*

|ஆயிரம், பல என்பதைக் குறித்த வாசகம்; இதை அனந்த வாசி என்பர். தாமரை தண்மை,எழில்,செம்மை, தேனுடைமை ஆகியவற்றைப் பெற்றிருப்பது போல, இறைவன் திருவடி தன்பால் புக்கவர்களின் தாபங்களைப் போக்கிக் குளிரவைக்கும் தண்மையும், பேரெழிலும், செவ்வண்ணமும், அருளென்னும் தேனும் உடையது. பொன்வரை-மேரு; திண்மையும் பொலிவும் மதிப்பும் உடைமையால் பொன்வரை உவமையாயிற்று