பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எம்பெருமான் அழகைக் கண்ட பெண் 27


பவளமேகலை அணிந்த உமாதேவியோடு இருக்கிறான் என்ற போது தனக்கும் அந்த நிலை கிடைக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. ஆனால் அடுத்த கணமே அவன் எல்லாவற்றையும் கடந்து அப்பால் இருப்பவன் என்ற எண்ணம் வரவே பெருமூச்செறிகிறாள்.

அன பவள மேகலையோடு
அப்பாலைக்கு அப்பாலன் என்கின்றாளால்.

'இப்படியெல்லாம் வருணிக்கிறாளே; இந்த வருணனைகளுக்கு உரியவன் யார் என்று யோசித்துப் பார்த்தேன். எல்லாம் சிவபெருமானுடைய அடையாளங்களாக இருக் கின்றன. இந்த அடையாளங்களோடு விளங்கும் அப்பெருமானப்பற்றிச் சொல்கிறாளே இவளுக்கு இவை எப்படித் தெரிந்தன?’ என்று ஆராய்ந்தேன். 'முன்பெல்லாம் இப்படிப் பேசவில்லையே! இப்போது திடீரென்று இந்த மாற்றம் ஏன் வந்தது, என்று யோசித்தேன் உண்மையை உணர்ந்தேன்.”

'எதை உணர்ந்தாய்?

"இவள் தன் தோழிமாரோடு திருக்கழிப்பாலைக்குப் போனாள், வேடிக்கையாகப் போய் அங்குள்ள காட்சிகளையெல்லாம் கண்டு வரட்டுமே என்று அவள் போவதற்கு இசைந்தேன். போய் வந்த பிறகு அவள் இந்த ஊரில் இருப்பவளாகவே தோன்றவில்லை. இன்னும் திருக்கழிப்பாலையில் சிவபெருமான் திருமுன் நின்று அவனைக் கண்ட கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பவளைப் போலவே பேசுகிறாள். திருக் கழிப்பாலையில் கடல் இருக்கிறது. அங்கே பவளங்களை அலைகள் மோதிக்கொண்டு வந்து கரையில் சிந்துகின்றன. அவற்றை அவள் பார்க்கவில்லை. கருணைக் கடலாகிய சிவபெருமானை மட்டும் பார்த்திருக்கிறாள். கடலில் உள்ள பவளத்தைப் பார்க்கவில்லை. சிவபெருமானுடைய பவளத் திருத் தோளைப் பார்த்திருக்கிறாள். அதனால்தான் இப்படிப் பேசுகிறாள். திருக்கழிப்பாலைச் சிவபெருமானக் கண்டிருக்க வேண்டும். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.” -