பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அப்பர் தேவார அமுது

கனபவளம் சிந்தும் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ?

இவ்வாறு ஒரு பெண்ணைப் பெற்ற தாய் சொல்வதாக் அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.

வனபவள வாய்திறந்து வானவர்க்கும்
தானவனே என்கின் றாளால்;
சினபவளத் திண்தோள்மேல் சேர்ந்திலங்கு
வெண்ணீற்றன் என்கின் றாளால்;
அணபவள மேகலையோடு அப்பாலைக்கு
அப்பாலான் என்கின் றாளால்;
கனபவளம் சிந்தும் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ?

[இந்தப் பெண் தன் அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து, தேவர்களுக்கெல்லாம் அவரவர்களுக்குரிய பதவிகளையும் போகங்களையும் தானம் செய்பவனே என்கின்றாள்: தன்னுடைய திண்ணிய தோள்களின்மேல் தனக்குரிய அடையாளமாகச் சேர்ந்து விளங்குகின்ற வெண்மையான திரு நீற்றை உடையவன் என்கின்றாள்; இன்னவாறு உள்ளவளென்று அறிய முடியாத அத்தகைய, பவளமேகலையை அணிந்த உமாதேவியோடு அப்பாலைக்கும் அப்பாலாக இருப்பவன் என்கின்றாள்; கனமான பவளங்களை அலைகள் கொண்டு வந்து கரையிலே சிந்தும் திருக்கழிப்பாலையைச் சேர்ந்து நித்தியவாசம் செய்யும் சிவபெருமானைத் தரிசித்தாளோ?[1]

  1. வனபவளம்-அழகையுடைய பவளம்; செவ்வண்ணத்தையுடைய பவளம் எனலும் ஆம், அவள் வாயைத் திறக்கும் போதே அதன் வண்ண எழில் தெரிகிறது. பிறகு சொல்லினிமை தோன்றுகிறது. தானவன்-தானம் செய்பவன்; இறைவன் மும் மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் உரிய பதவிகளை அளித்துத் தம் தொழில்களை ஆற்றும்படி செய்பவன். சின்னம் என்பது சினம் என்று நின்றது. அது வெண்ணீற்றுக்கு அடை. சினப் பவளம் என்பது எதுகை நோக்கிச் சினபவளம் எண் வந்தது.