பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எம்பெருமான் அழகைக் கண்ட பெண் 29.


இறைவன் வீரம் செறிந்த தோளையுடையவன்; அதனால் திண்டோளாயிற்று. அவன் வீரத்தைப் புலப்படுத்தும் எட்டுத் தலங்கள் அட்ட வீரட்டானங்கள். பெண்களுக்கு ஆடவரின் ஆண்மைக்கு இடமாகிய தோளின்மேல் விருப்பம் உண்டாவது இயல்பு; 'மங்கையர்கள், தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்” என்பது நளவெண்பா. செந்நிறமுள்ள திருத்தோளில் சேர்ந்தமையால் திருநீறு பின்னும் விட்டு விளங்கு கிறது. அன-அன்ன; நெஞ்சறி சுட்டு; இத்தகையவளென்று சொல்ல இயலாமல் உணர்ச்சியினால் உணரப்படுபவளாதலின் இவ்வாறு சொன்னாள். பவள மேகலை-பவளத்தாலான மேக லையை அணிந்த உமாதேவி: அன்மொழித்தொகை. பவளம் சிந்தும் கழிப்பாலையில் உள்ளவளாதலின் பவள மேகலை அணிவது எளிதாயிற்று. அப்பாலைக்கு - கருத்துக்கும் எட்டாத அத்தகைய பகுதிகளுக்கும்; அப்பாலைக்கும் என்ற உம்மை தொக்கது. கன பவளம் - நன்கு முதிர்ந்து திரண்டு கனம் பெற்ற பவளம். சிந்தும்-எளிதிலே கிடைக்கும்படி கரையிலே சிந்தும் . மகளிர் அணிகலமாக அணியும் பவளம் எளிதிலே கிடைக்கும் இடத்தை அடைந்தாளேனும் அந்தப் பெண்ணுக்கு அதன்மேல் ஆசை தோன்றாமல் எம்பெருமான் மேல் காதல் பிறந்தது என்பது குறிப்பு.

கண்ணாற் கண்டு உள்ளத்திலே பதித்ததை வாய் அடிக்கடி சொல்வது மனித இயல்பு. வயிறு நிறை உண்டாருக்கு ஏப்பம் வருவது போலக் கருத்து நிறைய உண்டாருக்கு இப்படிப் பேச்சு வரும்.

அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நான்காம் திருமுறையில் ஆறாம் திருப்பதிகத்தில் உள்ள முதல் பாட்டு இது.