பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. மனத்தே வைத்தேன்

நாம் நம் மனத்தில் எத்தனையோ ஆசைகளை வைத்திருக்கிறோம். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய தீய குணங்கள் அதில் நிரம்பியுள்ளன. குப்பை போன்ற இந்தத் தீய குணங்கள் நிரம்பிய குப்பைத் தொட்டியாக இருக்கிறது, நம் மனம். குப்பை நிறைந்த இடத்தை யார் அணுகுவார்கள்? அதில் மேலும் மேலும் குப்பையைத்தான் கொட்டுவார்கள். அந்தக் குப்பைத் தொட்டியில் நல்ல பொருள் ஏதும் இருக்க இடம் இல்லை. +

பிறருக்கு நம்மிடத்தில் உள்ளதைக் கொடுப்பது நல்ல பண்பு. நல்லவர்களுக்கு நம் வீட்டில் இடம் கொடுத்துத் தங்கச் செய்வதால் அவர்களுடைய ஆசி நமக்குக் கிடைக்கும். அப்படியின்றி உள்ளதை ஒளித்து வைத்துக்கொண்டு யாரேனும் ஏதாவது கேட்டால் இல்லையென்னும் வஞ்சகர்கள் உள்ளம் உலோபம் நிரம்பியது. அத்தகைய வஞ்ச நெஞ்சத்தில் நல்ல பொருள் இராது. எங்கும் இருக்கும் இறைவன் அவர்களு டைய நெஞ்சத்தில் இருந்தாலும் அவர்கள் காணமுடியாதபடி ஒளிந்து நிற்பான்; அவர்கள் உள்ளத்தில் இருந்துகொண்டே அவர்களுக்கு அரியவனாக இருப்பான்.

கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை.

அவ்வாறு இன்றித் தம்மிடம் உள்ளவற்றை ஈபவர்கள் தாராள புத்தி உள்ளவர்கள். அத்தகையவர்கள், "இன்னும் கொடுக்க நம்மிடம் பொருள் இல்லையே!” என்று வருந்துவார்கள். "நம்மிடம் கொடுப்பதற்கு இன்னும் என்ன இருக்கிறது?" என்று எண்ணி எண்ணிக் கிடைத்ததைக் கொடுப்பார்கள். அவர்களை,

" உள்ளி உள்ளனல் லாம்உவந்து ஈயும்அவ் வள்ளியோர்"