பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. இதுதான் இவர்க்கு இயல்போ ?

சிவபெருமானிடம் அன்பு கொண்டவர்கள் அவனைப் பலபடியாகப் புகழ்ந்து துதிப்பார்கள்; தம்முடைய குறைகளைச் சொல்லி இரங்குவார்கள்; சில சமயங்களில் மிகவும் நெருக்கமாக நின்று ஏசுவது போலப் பேசுவார்கள். இவை யாவும் பக்தி உணர்வால் உண்டாகும் விசித்திரங்கள். சுந்தரமூர்த்தி நாயனர் இறைவனோடு தோழமை கொண்டு இப்படி அடிக்கடி பாடுவார். மற்றவர்களும் சில சமயங்களில் இப்படிப் பாடுவதுண்டு. அப்பர் சுவாமிகள் அவ்வாறு பாடுவார், சில இடங்களில்.

வளமான வாழ்க்கை உடையவர்கள் தம்மை அணிகளாலும் ஆடை வகைகளாலும் அலங்கரித்துக்கொள்வார்கள். சிவபிரான் எத்தகையவர்? மார்பு நிறையச் சந்தனம் பூசிக் கொள்கிறாரா? எல்லோருடைய உடம்பும் தேய்ந்து மாய்ந்து எரிந்த வெள்ளைப் பொடியை அவர் பூசிக் கொள்கிருர். நல்ல வண்ணமும் மணமும் உடைய பொடியைச் செல்வர்கள் பூசிக் கொள்வது போலத்தேயும் வெண் பொடியைப் பூசிக் கொள்கிறார், அதில் என்ன அழகு இருக்கிறது? அதுமட்டுமா? நெற்றியிலே அழகும் மணமும் உள்ள சந்தனப் பொட்டை இட்டுக் கொள்வது வள வாழ்வுடையவர்களின் வழக்கம். அவரோ பிறைச்சந்திரனை நுதலில் திலகமாக வைத்துள்ளார். திலகம் இட்டால் நடு நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். அவர் அதையும் சரியாக இட்டுக் கொள்ளாமல் நெற்றியின் மேலே பதித்துக் கொண்டிருக்கிறார். அது ஒர் அழகா?

தேய் பொடி வெள்ளை பூசி அதன்மேல் ஓர் திங்கள் திலகம் பதித்த நுதலர்.