பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7. மங்கையோடிருக்கும் யோகி

றைவனுடைய அடியவர்கள் எல்லார்க்கும் இனியவர்களாக இருப்பார்கள்; இறைவனை எண்ணி எண்ணி உருகுவார்கள். நாமாக இறைவன் திருமுன் நின்றால் நமக்கு உருக்கம் உண்டாவதில்லை. ஆனால் அன்பர்கள் அங்கே உருகி அழுதால் அப்போது நமக்கு உருக்கம் உண்டாகிறது. இது மனித இயல்பு. வெயில் காயும் போது நாம் வீதியிலே நடக்கிறோம். அதன் வெம்மை நம்மைத் துன்புறுத்துவதில்லை. ஆனால் வெயிலினால் சூடு ஏறிய மணலில் நடந்தால் நம் கால் சுடுகிறது. நடக்க முடிவதில்லை. வெயிலினால் உண்டாகாத உறைப்பு அதை ஏற்ற மணலால் உண்டாகிறது. அவ்வாறே இறைவன் திருமுன் நாம் மட்டும் இருந்தால் உண்டாகாத உருக்கம் அடியவர்கள் உருகி நிற்கும்போது நமக்கும் உண்டாகிறது.

ஆகவே, நாம் இறைவன்முன் சென்று தனியே வணங்கு வதைவிட அடியார் குழுவோடு சென்று வணங்கினால் அவர்களுடைய சார்பினுல் நம்மிடமும் பக்தி உணர்ச்சி எழும். “அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால், இன்ப நிலை தானேவந்து எய்தும் பராபரமே” என்பர் தாயுமானவர்.

இறைவனைத்தொழுவதைவிட அடியாரைத்தொழுவதனால் இந்த நலம் கிடைப்பது காரணமாக அடியார்களைப்பலர் நாடித் தொழுவார்கள். பழங்காலத்தில் திருஞான சம்பந்தரோடும் திருநாவுக்கரசரோடும் கூட்டம் கூட்டமாகத் தொண்டர்கள் சென்றார்கள் என்று பெரியபுராணத்தால் தெரிய வருகிறது. ஆகவே உண்மையான அடியார்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு பல நல்லவர்கள், இறைவன் அருளைப் பெற ஆசை கொண்டவர்கள், இருப்பார்கள்; அவர்களைத் தொழுவார்கள் காலில் விழுந்து தொழுது எழுவார்கள்.