பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4



கோயிலில் வழிபாடு நடக்கும்பொது அவற்றை ஓதுவது வழக்கம். மற்ற நேரங்களிலும் அவற்றில் சிந்தையைச் செலுத்தி ஆழ்ந்து பயின்று நலம் பெறுவார் பலர். அப்பர் சுவாமிகளுடைய திருப்பாடல்கள் மனத்தை உருக்கும் தன்மை வாய்ந்தவை. சமண சமயத்தில் சில காலம். இருந்து பிறகு இறைவன் திருவருளால் மீண்டும் சைவ சமயத்தை நாடி வந்தவர் அவர். சில காலம் தாயைப் பிரிந்திருந்து பிறகு அவளை அடைந்த குழந்தை எவ்வளவு ஆர்வத்தோடு தாயுடன் ஒட்டி உறவாடுமோ அந்த வகையில் அன்பு செய்த பெரியார். அவர். அவருடைய பாடல்களில் கழிவிரக்கமும் இறைவனுடைய பெருங்கருணைத் திறமும் ஒலிக்கும். பல இடங்கள் நமக்காகவே பாடி வைத்தவை போல் தோன்றும். நாமாக நம் உணர்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லத் தெரியாத ஊமைகளாக இருக்கும்போது, அந்தப் பெருமான் நம் குறைகளையே தாம் கொண்டவர்போலப் பாடுகையில், அவை நமக்கு உணர்ச்சியைத் தருகின்றன. நாமும் அவற்றினூடே இணைந்து உருகுகிறோம்.

அத்தகைய பாடல்களில் சிலவற்றைச் சிந்தித்து விரிவு படுத்தி எழுதிய கட்டுரைகள் இவை. 'திருமுறை மலர்கள்’’ என்ற பெயரில் சைவத் திருமுறைகளில் உள்ள சில பாடல் களுக்குரிய விளக்கக் கட்டுரைகளை முன்பு எழுதியிருக்கின்றேன். அந்த முறையில் இந்தக் கட்டுரைகளையும் எழுதினேன். பொருட்செறிவுள்ள பாடல்களாதலின் நம் அறிவுக்குத் தெளிவாகப் புலப்படும் வகையில் இவற்றை விரித்து எழுதும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த விரிவு அமைந்தது.

கட்டுரைகளைப் படித்து முடித்த பிறகு பாடல்கள் நம் மனத்தில் நன்றாகப் பதியும்; சொல்லின் பொருளும் நயமும் அழுந்தும்.

தேவாரத்தின் பொருட் செறிவையும் இனிமையையும் இந்தக்கட்டுரைகளால் உணரலாகும். அருளுடைய சான்றோர்