பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எங்களுரை


எங்கள் பதிப்பகத்தினின்றும் தமிழ் மக்களுக்குக் காணிக்கையாகப் படைக்கப் பெறும் நான்காம் வெளியீடு இந்நூல். இறைபக்தி நலிந்து வரும் இந்நாட்களில், அவ்வுணர்ச்சியை மக்களிடையே தூண்டி இறைவனிடம் நாட்டம் கொள்ளச் செய்யும் சிறு முயற்சியே இது.

ஆசிரியர் திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் தமிழுலகத்திற்கு நன்கு அறிமுகமான பெருந்தகையார். தமிழ் எங்கெல்லாம் பரவியுள்ளதோ அங்கெல்லாம் அவர்களுடைய பெயரும் பரவியுள்ளது. அவர்களுடைய இலக்கியப் பணியும், இறை பக்தியை மக்களிடையே பரப்பும் பெரும் பணியும் மக்கள் நன்கு அறிவர். இந்நூலில் அவர்களுடைய எழுத்து எளிமையாகவும் எளியவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்திருப்பது தெளிவு. இதைப் படிக்கும்போது, 'அவற்றைப் பாராயணம் பண்ணும்போது கண்ணீர் மல்க இருப்பார்கள்....” என்று தம் முன்னுரையில் அன்னாரது ஆசிரியப் பெருந்தகை டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களைப்பற்றிக் கூறியிருப்பதற்கிணங்க, வாசகர்கள் இதைப் படித்துக் கண்ணீர் மல்க நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

அப்பர் சுவாமிகள் போன்ற பல அருளாளர்கள் பாடிய பாடல்களுக்கு விளக்கக் கட்டுரைகள் வெளியிட உத்தேசித்துள்ளோம். இறைபக்தி மிகுந்த மக்கள் இதற்கு நல்லாதரவு கொடுத்து எங்களை ஊக்குவிப்பார்கள் என நம்புகிறோம்.

பதிப்பகத்தார்