உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 109

விசயநகரப் பேரரசும் அதைச்சார்ந்த மண்டல அரசுகளும், சிற்றரசுகளும் சிறப்பாகத் தெலுங்கு இலக்கியத்தையும், பொதுவாகக் கன்னடம் தமிழ் மலையாள இலக்கியங்களையும் வளர்க்கத் தூண்டுதலாயிருந்தன.

பகமனிப்பேரரசும் விசயநகரப்பேரரசும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் தோன்றியவை. விசயநகர ஆட்சி, உண்மையில் முற்பட்டே தொடங்கிற்று. ஆயினும், பகமனிப்பேரரசு விரைவில் சிதறுண்டு, வலிமை வாய்ந்த பல அரசுகளாயிற்று. அதன் வரலாற்றை நாம் முதலில் எடுத்துக் கொள்வதன் காரணம் இதுவே. சிதறியபின்பும் அது விசயநகரப் பேரரசின் வலுவைச் சிதறடிக்கும் ஆற்றல் உடையதாயிருந்தது.


பகமனிப் பேரரசு

மாலிக்காபூர் படையெடுப்பின் பின் தேவகிரி தில்லியின் ஆட்சிக்கு உட்பட்டது. முகமது துக்ளக் என்ற தில்லிப் பேரரசன் தில்லியிலிருந்து தன் தலைநகரை அதற்கு மாற்ற முயன்றான். இத்திடீர் முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது. அத்துடன் அதனால் ஏற்பட்ட குழப்பத்திடையே அலாவுதின் ஹசன் கங்கு பகமனி என்பவன் 1347-இல் தானே தேவகிரிக்கும் அதனைச்சூழ்ந்த பகுதிக்கும் அரசனானான். குல்பர்கா என்ற தலைநகரை அமைத்து அவன் பகமனிப் பேரரசின் முதல்வனானான். மேலைச் சாளுக்கியர் ஆண்ட தென்னாட்டின் வடமேற்குப் பகுதி முழுவதும் விரைவில் இப்பேரரசில் ஒன்றுபட்டது.

இக்காலத்தில் தமிழகத்தில் மதுரையில் ஒரு முஸல்மான் அரசு ஏற்பட்டது. அதன் ஆட்சி முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக நடைபெற்றது அவர்களுக்கு வடக்கே உள்ள கடைசி ஹொய்சள அரசர் அடிக்கடி முஸல்மான் படைகளின் தாக்குதலுக்கு ஆளானாலும் நீடித்த போராட்டம் நடத்தினர். வடக்கே உள்ள இஸ்லாமியப் பேரரசு தெற்கே பரவாமலும் தெற்கிலுள்ள இஸ்லாமிய அரசு வளர்ந்து அதனுடன் தொடர்பு கொள்ளாமலும் அது சில காலம் தடுத்தது. ஆயினும் கடைசி ஹொய்சள அரசன் மூன்றாம் பல்லாளனுக்குப்பின் அவ்வரசும் வீழ்ச்சியடைந்தது.