தென்னாடு 113
தெலுங்குக்கு அடுத்தபடியாகக் கன்னட இலக்கியமும் அதற்கடுத்த படியாகத் தமிழ் இலக்கியமும் விசயநகர ஆட்சியில் தழைத்தன. தமிழ் இலக்கியத்துக்கும் தமிழகக் கோயில்களுக்கும் பேராதரவளித்தவர் கிருஷ்ணதேவராயருக்குப் பின் வந்த பேரரசரிடம் படைத்தலைவராகவும் அமைச்சராகவும் தமிழகத்தின் தண்டத் தலைவராகவும் இருந்து புகழ்பெற்ற தளவாய் அரியநாத முதலியார் ஆவர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் செப்பம்செய்து ஆயிரக்கால் மண்டபத்தைச் சீரமைத்த காரணத்தால் அவர் வீரச்சிலை அம்மண்டபத்தருகில் இடம்பெற்றது.
கிருஷ்ணதேவராயருக்குப்பின் ஆண்ட அச்சுதராயர் காலத்தில் (1529-1542) தமிழகத்தில் பேரரசுக்கெதிரான கிளர்ச்சி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தித் திருவிதாங்கூர் அரசன் தென்பாண்டிநாட்டைப் பாண்டியரிடமிருந்து கைக்கொண்டான். அச்சுதராயர் தாமே நேரடியாக வந்து கிளர்ச்சியை அடக்கியதுடன் பாண்டிய இளவரசியை மணந்து கொண்டார். தமிழக முழுவதையும் மேலாட்சி செய்ய அவர் விட்டலராஜர் என்ற படைத்தலைவரையும் அமர்த்தி விட்டுச் சென்றார்.
அச்சுதராயருக்குப் பின்னும் தமிழகத்தில் பாண்டியர் சோழர் பூசல்கள் ஏற்பட்டன. அதன் பயனாக நாகம நாயக்கன் என்ற தலைவன் மேலாளாக அனுப்பப்பட்டான். இவன் புதல்வன் விசுவநாதனே 1559-ல் மதுரை நாயக்க மரபின் முதல்வனானான்.
1565-இல் தலைக்கோட்டைப் போருக்குப்பின் பீஜப்பூர் கோல்கொண்டா வளர்ச்சியடைந்தது. விசயநகரம் தளர்ச்சியுற்றது. தலைநகரத்தையே இழந்து, பேரரசர் தமிழகத் துணைத் தலை நகரமாக இருந்த சந்திரகிரியில் வந்திருந்து ஆண்டனர். தஞ்சை, மதுரை, மைசூர் ஆகிய மூன்றிடங்களிலுமுள்ள தலைவர்கள் அரசராகி வலுப்பெற்றபின் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
மதுரை நாயக்க மன்னர்
மதுரையில் நாயக்க மரபினர் 1559 முதல் 1736 வரை கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் புகழுடன் ஆண்டனர். பாண்டியர் பழம்புகழுக்கு இவர்கள் பல வகையில் புது மெருகு ஊட்டினர்.