உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 127

கல்வியறிவிலும் அரசியல் வாழ்விலும் மக்களில் ஒரு சிறு பகுதியினரே ஈடுபட்டிருக்கும் எந்த நாடும் நீண்ட நாள் தன்னாட்சியுடன் இருக்க முடியாது; தன்னாட்சியுடன் இருக்கும் காலத்திலும் தன் நாகரிகத்தைப் பிறருக்கு வழங்க முடியுமேயன்றித் தனக்குப் பயன்படுத்த முடியாது.


மக்கள் விடுதலை ஆர்வம்

பிரிட்டிஷ் ஆட்சியில் தென்னாட்டு மக்களிடையே அறிவு எல்லா வகுப்பினரிடையேயும் ஓரளவேனும் பரந்தது. அரசியலில் மக்களின் எல்லாப் பகுதியினரும் படிப்படியாக இடம் பெற்றனர். விடுதலையார்வம் முன்போல் ஆள்பவர் விடுதலையார்வமாக இராமல், முதன் முதலாகமக்கள் விடுதலை ஆர்வமாகத் தொடங்கிற்று. அவ்வார்வத்தை வ.உ.சிதம்பரனார், பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.கலியாணசுந்தரனார், கலையறிஞர் சி.என்.அண்ணாத்துரை, சக்ரவர்த்தி சி. இராசகோபாலச்சாரியார், ஆகிய தென்னாட்டுத் தலைவர்களும், தென்னாடு கடந்த மாநிலத்தில் பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, வங்கச் சிங்கம் தலைவர் பெருந்தகை போஸ், பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களும் விடுதலைப் பேரியக்கமாக வளர்த்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவினர். தென்னாட்டுத் தேசிய வாழ்வை அவர்கள் விட்டஇடத்திலிருந்து மேற்கொண்டு முன்னேறத் தென்னாட்டு மக்கள் இனி பாடுபடவேண்டும்.


சமூக சீர்த்திருத்த இயக்கங்கள்

தமிழகத்தில் சித்தர்கள் மக்களுக்குச் சமய அறிவோடு சமூகச் சீர்த்திருத்த அறிவையும், பகுத்தறிவையும் புகட்ட அரும்பாடுபட்டனர். மலையாள நாட்டில் குஞ்சன் நம்பியாரும், கன்னட நாட்டில், சர்வஞ்ஞரும், தெலுங்கு நாட்டில் வேமண்ணாரும் இதே அரும்பணியைச் செய்தனர். மராட்டிய நாட்டில் வைணவ இயக்கத்தைப் பரப்பிய ஞானேசுவரர் முதலிய பக்தர்களும் உயர் குடியினரின் பேரெதிர்ப்பையும் பொருட்படுத்தாது இதே பணியை ஆற்றினர். தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை பக்தி இயக்கமும் சமூகச் சீர்திருத்த இயக்கமும் ஒன்றுபட்டு நிலவின என்பதை இராமலிங்க வள்ளலாரின் வரலாறும் பாடல்களும் நன்கு