தென்னாடு 131
விடுதலைப் போராட்டங்கள்
குடியானவர் புரட்சிகளிலும், குடிசைத்தொழில் இயக்கங்களிலும், சட்டமறுப்புக்களிலும் கருநாடகம் தமிழகத்துடனும், கூர்ச்சரம், பாஞ்சாலம் ஆகிய மண்டலங்களுடனும் போட்டியிட்டு நின்றது.
1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930-ல் நடைபெற்ற உப்புப்போர் அல்லது சட்டமறுப்பு இயக்கம்,1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியே போ' என்ற குரல், அதே சமயம் கடல் கடந்து தமிழகத்தில் நின்று தலைவர் பெருந்தகை போஸ் நிகழ்த்திய விடுதலைப் போர்ப்புயல் ஆகிய இத்தனையும் உலக மக்கள் உள்ளத்திலும் உலக அரசியலின் போக்கிலும் பெருத்த மாற்றம் உண்டு பண்ணின. 1947 உலகம் அதற்களித்த மறுமொழி, பிரிட்டிஷ் ஆட்சி விலகிவிட்டது. கீழை உலகின் விடுதலை விளக்குப் பொன்னொளி வீசத் தொடங்கியுள்ளது.
தென்னாட்டின் தேசிய விடுதலைக் குரலுக்கு இரண்டு ஓசைகள் உண்டு. ஒன்று புறஓசை. மற்றொன்று அகஓசை, புறஓசை வெளியாட்சி ஏகவேண்டுமென்பது. அகஓசை தன்னாட்சி ஏற்படவேண்டுமென்பது. இவற்றுள் ஒன்று நிறை வெய்தியுள்ளது. மற்றது இன்னும் மெய்யான வடிவில் ஏற்படவில்லை.
இந்திய மாநில இயக்கம் தோன்றுமுன் இருந்ததைவிட மாநில இயக்கத்தின் பின் மாநிலத்தின் தொழில் நிலை உயர்ந்துள்ளது. அது பிரிட்டனுடன் சிறிது தொலைவில் நின்றாவது போட்டியிடவல்ல தொழிலரசாகவும் வல்லரசாகவும் ஆகியிருக்கிறது. ஆனால், மாநிலத்தின் இந்த முன்னேற்றத்தில், அயலார் படையெடுப்புகளுக்கு வாயிலாயிருந்த சிந்து கங்கைப் பரப்பே பங்கு கொண்டுள்ளது. கீழ்த்திசை நாகரிகத்தின் தூய தாயகமான தென்னாடு அதனின்றும் ஒதுங்கி அதன் நிழலாக, அதன் வளர்ச்சிக்கு இடம் தரும் வாணிகக் களமாக மட்டுமே நிலவுகின்றது.