31. வெள்ளைக்காரன் வழங்கிய வழக்கா?
'திராவிடம்! வெள்ளைக்காரன் உபயோகித்த, உற்பத்தி செய்த பெயராயிற்றே! அதை ஏன் நாம் நம் பெயராகச் சூட்டிக்கொள்ள வேண்டும்?' என்று கேட்பவர் உண்டு. வெள்ளையன் உருவாக்கிய பாரத தேசியத்தை, அவனுக்குமுன் என்றும் ஒன்றாக இயங்கியிராத மாநில ஒருமைப்பாட்டை, ஏக இந்தியாவைத் தம் புதுத் தேசியமாகக் கொள்பவர்கள் கேட்கும் கேள்விதான் இது. அதுமட்டுமோ? அந்த ஏக இந்தியாவை மட்டுமன்றி அந்த வெள்ளையன் பிரித்த பிரிவினையையும், ஏற்றுப் பிரிக்கப்பட்ட புத்தம் புதிய இந்தியக் கூட்டுறவையும் தம் முன்னோர் வழிச் சொத்தாகக் கொண்டு பாரதம் என்ற பெயர் சூட்டியவர்கள்தாம் இக் கேள்வியாளர்.
தவிர, திராவிடம் என்ற பெயர் வெள்ளையன் அளித்த பெயரல்ல என்பதை அவர்கள் அடுத்த கேள்வியே காட்டுகிறது. திராவிடம்! ஆரியப் பகைவன் நம் இனத்தை இழிவாகக் கருதி வசைபாடி அளித்த பெயரையா நாம் ஏற்பது! “ஓடி வந்தவர்” ‘திருடர்’, 'திராவைகள்', ‘பஞ்சை’கள் என்றல்லவா சமஸ்கிருதத்தில் அதற்குப் பொருள்! அந்தச் சொல்லைக் காதால் கேட்டாலே கர்ணகடூரமாய் இருக்கிறதே!
பகைவன் என்று ஆரியனை ஒப்பியழைத்து, சில சமயம் அயலான் என்று மனமாரக் கூறிக்கொண்டே ஆரியர் பக்கமாக நின்று இன உரிமை விற்று வயிறு வளர்க்கும் விபீஷணாழ்வார்கள் பேச்சு இது. ஆனால், திராவிடம் என்ற சொல் வெள்ளையரால் மட்டுமல்ல, சமஸ்கிருத கால ஆரிய நாட்டவர் வழக்கிலும் அது இருந்து வந்தது என்பதை நினைவூட்டுகிறது. கி. பி. 7ஆம் நூற்றாண்டில் ல் வாழ்ந்த குமாரிலன் தென்னக மொழி அல்லது மொழிகளைத் திராவிட ஆந்திர பாஷா என்று கூறுகிறான். அதே நூற்றாண்டில் கிட்டத்தட்ட கி. பி. 640-இல் சீன யாத்திரிகன்