258
அப்பாத்துரையம் 11
நடுநிலக் கடலில் திரையர் கிளையினங்களில் ஒன்று விரிந்து சென்று, பண்டை உலகெங்கும் சென்று கடல் வாணிகம் பரப்பிற்று. அவர்கள் துறைமுக நகரம் திரெ என்னும் ‘டயர்’ நகரம் ஆகும். டயரிலும், சிடெனிலும் வாழ்ந்த இந்த பினீஷியரிட மிருந்தே எகிப்தியர் கப்பல் தொழில் கற்றனர். ஆனால், திரையருக்கும் முற்பட கிரேட் தீவிலும் அதன் சூழலிலும் வாழ்ந்த ஈஜிய, கிரேட்ட, மிசீனிய இனத்தவர் கடல்வாணிகம் சிறந்து வானில் பறக்கும் முயற்சியில் கூட முற்பட்டிருந்தனர் என்று இன்றைய வரலாற்றுப் பழமையாராய்ச்சியாளர் கருதுமளவு உயர்வுற்றிருந்தனர்.இவர்கள் 'திரையர்' ஆதலினாலேயே தம்மைச் சூழ்ந்த கீழைநடுநிலக் கடலுக்குத்திரேனியக்கடல்' என்ற பெயரிட்டிருந்தனர்.இன்றளவும் அப்பெயர் வழக்கில் இருந்து வருகிறது.
உரோமப் பேரரசின் தலைமையாட்சியாளராகிய பாத்திரி சியர் (தந்தையர்) ஆரியரல்லர்; ஆரியர் வருமுன் இருந்த எதுருசுக்கானரே. அவர்கள் பெயரிலும் ‘திரையர்' என்ற பெயரின் தடம் காணப்படுகிறது. ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் பிரிட்டனி லும் ஆரியர் வந்த பின் கலந்து குருமாராகியும், வருமுன் தனித்தும் வாழ்ந்த ஐபீரிய மக்கள், தம் தலைமைக் குருமார் குடியைத் ‘துருயிதர்' என்ற பெயராலேயே குறித்தனர். இதுவும் ‘திராவிட’ என்பதன் சிதைவே என்று திருத்தந்தை ஹீராஸ் கூறியுள்ளார்.
தற்கால மனித நாகரிகத்துக்கு மூலமான உலகின் தொல் பெரும்பழமை வாய்ந்த இனத்தை மேலை ஆசிரியர் எச்.ஜி.வெல்ஸ் என்பவர் தவிட்டு நிற இனம் (Brunette Race) என்பர். பிரிட்டன் முதல் ஜப்பான் வரையும், இது கடந்து அமெரிக்காவில் கூட அவர்கள் பரந்து வாழ்ந்த காலம் 7000 ஆண்டுகட்கு முற்பட்டது. இந்த இனத்தில் திராவிடர் ஒரு பகுதி என்பர் ஆசிரியர் வெல்ஸ்.
திராவிடம் என்ற சொல்லாராய்ச்சி இவ்வாறாக, திராவிட நாட்டின் புதுமையல்ல, பழம்பெருஞ்சிறப்பை - சிறுமையையல்ல, உலகளாவிய அதன் பெருமையை, பிரிவினை வேற்றுமையல்ல, மனித இன முழுவதும் அளாவிய அடிப்படை ஒற்றுமையைக் குறித்த சொல் ஆகும்.
தனித்திராவிடர் தமிழகத்துக்கும், கீழ்த்திசைக்கும் மட்டு மன்று, உலகுக்கே ஒரு புது ஊழி வகுத்தவர், வகுக்க வல்லவர் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.