54 அப்பாத்துரையம் 11
மூன்றை வென்ற தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், ஆன்கன்றுக்காகத் தன் மகனைப் பலியிட்ட மனுச்சோழன், புறாவுக்காகத் தன்னைப் பலியிட்ட சிபிச் சோழன் ஆகியவர்கள் கதை பழைமை வாய்ந்தது. ஆனால், இவை வரலாறு என்று கூறுவதற்கில்லை.
சோழருள் காலத்தால் மிக முற்பட்டவன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி. இவனுக்குப்பின் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் முதலாம் கரிகாலனும் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும், இரண்டாம் கரிகாலனான கரிகாற் பெருவளத்தானும் ஆண்டனர். கரிகாற் பெருவளத்தான் புதல்வியான நற்சோணை அல்லது மணக்கிள்ளியே சேரன் செங்குட்டுவனின் தாய்.
வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்ற சேர அரசனுடன் போரிட்டு மடிந்தான். ஆனால், அடுத்த அரசன் முதலாம் கரிகாலன் வெண்ணிப்போரில் அச்சேரனை வென்றான். போரில் புறப்புண்பட்டதனால் சேரன் வடக்கிருந்து மாண்ட உருக்கமான காட்சியைக் கழாத்தலையார் என்ற புலவர் (புறம் 65) தீட்டிக் காட்டியுள்ளார். வெண்ணிப்போரை மாமூலனார் (அகம் 55), நக்கீரர் (அகம் 141), பரணர் (அகம் 125, 246, 376), கருங்குழலாதனார் (புறம் 7,224) ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.
உறுவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி முதலாம் கரிகாலன் மகன். இரண்டாம் கரிகாலன் தந்தை.
காவிரிக்குக் கரை கட்டியவன் என்றும், இமயத்தில் சோழர் கொடியாகிய புலியைப் பொறித்தவன் என்றும், காடாயிருந்த தொண்டை நாட்டின் பெரும்பகுதியை நாடாக்கி வேளாளரைக் குடியேற்றியவன் என்றும் தென்னாட்டு வரலாற்றில் பெரும்புகழ்பெற்ற அரசன் இரண்டாம் கரிகாலன். இவன் காலம் கி.பி.50 முதல் 90 வரை எனலாம். பன்னூறாண்டுகளுக்குப் பின்னும் மைசூர், இராயலசீமாப் பகுதிகளிலுள்ள சிற்றரசர் அவன் புகழ்மரபைத் தம் கல்வெட்டுக்களில் பாராட்டிப் பேசுகின்றனர். காலத்தாலும் இடத்தாலும் வேறுபட்ட பலநாட்டு மன்னர், தாம் கரிகாலன் மரபினர் என்பதிலும், தம்முன்னோர் கரிகாலனுக்காகக் காவிரிக்குக் கரைகட்டியவர் என்பதிலும் அடையும்