124
அப்பாத்துரையம் - 23
லைலா: வேண்டாம், சஹரியார், இந்தப் பேரரசியின் சுழலில் விழவேண்டாம். நன்கு ஆய்ந்து பாருங்கள்.
சஹ: நான் பார்த்துவிட்டேன். நான் போரிடத்தான் போ கிறேன். நான் என்ன மனிதனல்லவா? ஆண் பிள்ளையல்லவா?
லைலா: அன்பரே, நான் கேட்டுக் கொள்ளுகிறேன், இந்தத் தொந்தரவுகள் உங்களுக்கு வேண்டாம். என்னிடம் நீங்கள் முன்பே உறுதிமொழி கூறியிருந்தீர்களே. நினைத்துப் பாருங்கள்.
(நூர்ஜஹான் திடுமென நுழைகிறாள்)
நூர்: எனக்கெதிராகச் சஹரியாரை ஏன் தூண்டுகிறாய்,
லைலா?
லைலா: என் காதலரைக் காக்கும் உரிமை எனக்கு உண்டு. பேரரசுக்குப் போரிடும் வல்லமை அவருக்கு இல்லை. அவர் கவிஞர்.
நூர்: உதவ நானிருக்கும் போது அந்தக் கவலை உனக்கு ஏன்?
லைலா: உனக்குத்தான் இப்போது என்ன வல்லமை? உன் வல்லமைக்குக் காரணமான ஆள் இப்போது போய்விட்டார்.
நூர்: நீ பேசியது போதும். சஹரியார் உன் அறிவுரையை விரும்பவில்லை. கேட்டுப்பார்.
லைலா: அப்படியா, சஹரியார்?
சஹ: ஆம்.
லைலா: சரி, அன்பரே. என் எச்சரிக்கையைப் பின்பற்றா விட்டால், வருவதை அனுபவியும். பிற்பட்டு என்னால் உதவிசெய்ய முடியாமற்போகும். உம்மைக் காலனிடம் விட்டுச் செல்வது போல் செல்கிறேன்.
(போகிறாள்.)
நூர்: சஹரியார், நீ துணிந்து ஆக்ரா செல். நான் பின்னிருந்து உதவுகிறேன். நீ பேரரசர் மாப்பள்ளை; பேரரசர் கட்டளை உன்னைப் பேரரசராக்கியுள்ளது. போ.
(போகிறான்.)