204 ||
அப்பாத்துரையம் - 23
துறவியாடை அணிவிக்க வேண்டும். அவனது இயல்பான பெண் தோற்றமும் எடுப்பாக முக வசீகரமும் அப்புது உருவத்தை நிலைக்க வைக்கும். அப்போது அவன் வெளியே போகவும் முடியாது. முன்னிலும் பன்மடங்கு பெண்கள் அவனுடன் கூடி மருவவும் பழகவும் எந்தத் தடையும் இடையில் நிற்காது” என்று சிங்சேன் வகுத்துத் தந்த திட்டத்தை அனைவரும் வரவேற்றனர்.
தாச்சிங் கன்னித் துறவி உருவம் பெற்றான்.முதலில் அவன் தன் உருமாற்றங் கண்டு பொறாது சீறினான். ஆனால் சிங்சேன் சிறு குழந்தை போல் அவன் மடியில் அமர்ந்து கொண்டு, நா நயத்துடன் தேமொழியில் "அன்பனே, உனக்குப் போக எவ்வளவு அடங்கா விருப்பமோ, அதை விட ஆயிரம் மடங்கு எங்களுக்கு உன்னை இடையறாது வைத்துக் கொள்ள அடங்கா விருப்பம்; தணியா அவா. இத்தனை பேருடைய விருப்பம் உன் ஒருவனுடைய விருப்பத்தை விடப் பன்மடங்கு பெரிதல்லவா? உன்னை ஏமாற்றி விட்டோமென்று எண்ண வேண்டாம். உன்னை என்றென்றும் எங்கள் அருகிலே வைத்துக் காணவே இந்த ஏற்பாடு செய்திருக்கிறோம். அப்படியே உனக்கு இந்தச் செயல் ஏமாற்றத்தைத் தந்தாலும், மட்டற்ற மாறா அன்பு காரணமாக இந்த ஏமாற்றத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம். நாங்கள் அனைவரும் நீ செய்துள்ள இந்தத் தியாகத்துக்குக் கழுவாயாக உனக்கு உள்ளம் நிறைந்து குற்றேவல் புரிகிறோம்” என்று கொஞ்சலுடன் கூறினாள். உண்மையிலேயே அவர்களும் அது முதல் ஒருவர்க்கொருவர் போட்டியிட்டு அவனது ஒவ்வொரு சிறு குறிப்பும் நிறைவேற்றப் பாடுபட்டனர். அவர்கள் அவன் காலுக்குச் செருப்பாயும், தலைக்குத் தலையணையாயும், அவன் வேண்டும்போது உவந்தமர்ந்தும், வேண்டாதபோது அண்டையிலிருந்து காத்து நின்றும் அவன் பிணக்குத் தணித்தனர்.
தாச்சிங் மனச்சான்றுமட்டும் தன் மனைவியைக் காணவேண்டு மென்னும் பேரவாவால் துடிதுடித்தது. ஒரு நாள் அவன் தன் மனைவியை அழைத்து அவளிடம் தான் நயமொழிகள் கூறவேண்டுமென நினைத்தான். எனவே குங்சாவிடம் தன் முத்துமாலையைக் கொடுத்து, "இதை அடையாள மாகக் காட்டி, என் மனைவியிடம் என்னைப் பற்றிய