உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

43

சமர்காந்த் அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் பேசினார். ஆனால் வைதிக சாஸ்திரி ஒருவர் “என்ன கலிகாலம் போங்கள். உங்கள் பையன் ஒரு பட்டாணிச்சியிடம் அல்லவா காதல் கொண்டிருக் கிறானாம்" என்றார்.

தாம் நல்ல காலத்தில் வளர்த்த புராணப் பாடகர் கூடத் தம்மை இகழ்வது சமர்காந்துக்குப் பொறுக்கவில்லை. "போமையா போம். நீர்தான் புராணம் படித்தவராயிற்றே. இது ஒன்றும் புதிதல்லவே. உங்கள் கிருஷ்ணன் கோபிப் பெண்களை.."

அவர் வாய் மூடுமுன் புராணிகர் ஓடிவிட்டார். பிறரும் அவர் அபாரக் கோபம் கண்டு வாய்மூடினர்.

வாழ்க்கை அவருக்குக் கசந்து போயிற்று. ஆனால் கசப்பு முதலில் விசித்திர வழிகளிலெல்லாம் பாய்ந்தது. சமூகச் சீர்த்திருத்தமும் புத்தறிவியக்கங்களும் பரவுவது கண்டு சேட்களும் செல்வர்களும் ஒருபுறம், புராணிகரும் மதவாதிகளும் ஒருபுறம் புழுங்கினர். ஆகவே வியாஸ்ஜி என்ற பழம் புராணிகர் ஆதரவுடன் பண்டித மதுசூதன்ஜி என்ற புதுப் புராணிகரின் கதைக் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. சமர்காந்த் எவ்வளவு போடுகிறார் என்று பார்த்துப் பின் மற்ற சேட்கள் போட எண்ணினர். தலைவராக வந்த சேட்டிடம் சமர்காந்த் எவ்வளவு செலவாகும் என்றார். அவர் பதினாயிரம் ரூபாய் என்று மதிப்பிட்டு “நீங்கள் எவ்வளவு கூடுதல் போட முடியுமோ அவ்வளவும் நல்லது” என்றார்.

சமர்: நீங்கள் எவ்வளவு போடப்போகிறீர்கள்?

சேட்: நான் நூறு ரூபாய் போட இருக்கிறேன்.

சமர்: அவ்வளவுதானே. இதற்குப் பலரிடம் போவானேன்? போக மீதி முழுவதும் நான் போட்டுவிடுகிறேன். போங்கள்.

எதிர்பாராத இவ்வுள்ளன்பைக் கண்டு யாவரும் விழித்தனர். அது அவர் பொறுப்பின் ஒரு கூறு என்று எவரும் அறியவில்லை. பக்தி இருவகை. இன்பவாணர் பக்தி அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது. துன்ப வாணரின் பக்தி நம்பிக்கை அடிப்படை யானது. சமர்காந்த் பக்தி இன்ப வாணரின் பக்தி. ஆதலால் அச்சம் தீர்ந்து வெறுப்பும் கோபமுமாக மாறிற்று.