அப்பாத்துரையம் - 30
102 || உயர் குடிப் பசப்பருள் ஒருவர் என்று எண்ண முடியவில்லை. அதே சமயம் உங்கள் மெல் விரல்கள் மை படத் தக்கவையாகவும் தோற்றவில்லை.
அவள்: மைமட்டுமென்ன, அடிக்கடி சாயமும் தோய்ந் திருப்பதுண்டு. தாங்கள் அப்போது பார்த்தால் என்ன சொல் வீர்களோ?
அவன்: ஆகா; கவிதை நங்கை மட்டுமன்றி ஓவிய நங்கையும் உங்களிடம் வீற்றிருக்கின்றனரோ?.சரி, சரி, இத்தனை கலைப்பண்பு இந்த நாடோடிக் கவிஞனுடன் தன் முழுப் பொழுதைப் போக்கிவிடக் கூடாது. இசையாடல் அரங்கம் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். தாங்கள் அதை விட்டு...
அவள்: தரக்கேடில்லை. நான் அதில் சலிப்படைந்த பின் தான் வந்தேன்.
அவன்: அதற்காக வருந்துகிறேன். ஏனெனில், தங்களுடன் ஓர் ஆடல் ஆடி மகிழ எண்ணியிருந்தேன்.
அவள்: அதற்காக வருந்த வேண்டியதில்லை, ஐயனே. நான் ஆடலிற் கலப்பதில்லை. நான் இன்னும் இழவுத் துயராற்றிக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதை என் கறுப்பங்கியிலிருந்து தாங்கள் கண்டு கொண்டிருக்கலாம். ஆயினும், மாடியிருக்கையில் சென்றமர்ந்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அது ஆடுவதினும் இனிது. மனித உலகைக் கண்ணுறும் வானவர் போல ஈடுபடாமலே ஈடுபடலாம். வருகிறீர்களா?
அவன்:(இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்)நான் ஆடலில் அவ்வளவு தேர்ந்தவனல்ல. அதைப் பார்வையிடுவதில் தங்களுடன் அதனினும் எளிதாகப் போட்டியிட முடியும்.
ஆக்டேவ் தன் கட்டிளைமையிலும் அந்த சந்தமுடைய வனல்ல. ஆனால், அவன் நெட்டையான உறுதி வாய்ந்த உடலுடையவனாயிருந்தான். லாரைன் பார்வைக்கு அந்த சந்தமுடையவளாயினும் அவனைப் பார்க்க மிக நடுத்தர உயரமுடையவளாகவே காணப்பட்டாள். அவன் தோள்களில் சார்ந்து அவள் அரங்க மேடை சென்ற காட்சி கழுகினைப் பற்றி வாழை வளர்வது போன்றிருந்தது.