உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

107

ஆனால் அவன் வேறு எதையுமே கவனிக்க முடியாதவனாகவே ருந்தான்.

விருந்தினரிடையே பேச்சு பழைய ஃபிரஞ்சு நாட்டுப்பண்பாடு, அதன் நகர நாகரிகப் போக்கு, இவற்றுக்கெதிராக ரூசோ ஒருபுறமும் அரசி மறுபுறமும் வழக்கில் கொண்டு வந்த நாட்டுப்புற இயற்கை வாழ்வார்வம் ஆகியவற்றின் உயர்வு தாழ்வுகளைப் பற்றி ஊசலாடிற்று. பண்பரசியும் பேச்சுக் கலையில் வல்லவளுமான மாது சிராம்மோன் பேச்சை வேறு பக்கம் திருப்பி மீண்டும் நல்லிணக்க உணர்ச்சியை உண்டுபண்ணினாள். ஆக்டேவ் மூரட் இதனைக் கவனியாமலில்லை. அவள் அழகு, பண்பு ஆகியவற்றின் உயர்வைக் கண்டு, அவள் செல்வநிலையையும் உயர்குடி மதிப்பையும் எண்ணுந்தோறும் அவன் உள்ளம் உள்ளூர உடைவுற்றது. ஏனெனில், அவன் அவளை எவ்வாற்றானும் பெறமுடியாத நிலையை அவை வற்புறுத்தின. அவள் பாரிஸ் அழகரசி. செல்வத்தில் புரள்பவள். அவன் நாடோடி. அவன் வருவாய் மிகச் சிறிது. செலவு பெரிது. அவ்வருவாயும் சமய வாழ்வை யெண்ணி அவனுக்குத் தரப்பட்ட செல்வ வருவாயாத லால், மணமாகாத நிலையில் மட்டுமே அவனுக்கு உரியது. லாரைனை மணப்பதென்றால் அவன் முற்றிலும் ஓட்டாண்டி யாகத்தான் மணக்க வேண்டிவரும். மணமில்லாக் காதல், மறை தொடர்வு மட்டும் தான் இந்நிலையில் எண்ணக் கூடியது. ஆனால், மண உறவிலேயே இத்தனை உயர்வு தாழ்வு கடக்க வேண்டி யிருக்கிறது. மற்ற உறவு எண்ணுவதற்கும் இடமற்றது. அவன் இப்போது தன் காதல் தத்துவத்தையே மதிக்கவில்லை.என் செய்வது? என் செய்வேன் என்று இடையறா ஏக்கத்திலாழ்ந்தது அவன் உள்ளம்.

காதலை அவன் பழித்த காலமெல்லாம், நகையாடிய காலமெல்லாம், அது அவனை எள்ளி நகையாடும் காலம் வரும் என்று அவன் எண்ணவே இல்லை.

காதல் என்பது மலருக்கு மலர் தாவுவது என்றுதான் அவன் எண்ணியிருந்தான். காதல் என்பது மலருடன் ஒன்றுபட்டு அதன் வாழ்வில் வாழ்ந்து அதன் மாள்வில் மாள்வது போன்றது என்பதை அவன் இப்போது தான் கண்டான். ஆனால், இவ் எண்ணம் முன்பு வந்திருக்கக் கூடாதா? இளமையின் முற்பகல்