(124
அப்பாத்துரையம் - 30
லாரைன்: இன்னதென்று தெரியாமலே இவ்வளவு எளிதாக வாக்குறுதி கொடுத்துவிட்டீர்களே! அந்தமட்டில் எனக்கு நல்லதுதான். நான் கை பழக குழந்தைகளையும் நாயையும் பூவையும் பார்த்துப் பார்த்துத்தான் வரைகிறேன். அவர்களோ அவையோ ஒரு நிலையில் படத்துக்கு அமைந்திருக்க முடிவதில்லை. கலையருமையை அவர்கள் அறியமாட்டார்கள். நீங்கள் என்முன் இருந்து படித்துக் கொண்டிருப்பதானால், தங்களைப் பார்த்துப் படம் வரையலாம் என்றிருக்கிறேன்.
மூரட்: சிலை போலிருக்கச் சொல்கிறீர்கள். அது தானே நீங்கள் விரும்பும் கலைப்பண்பு! நல்லது. எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்.
லாரைன்: அதற்குள் நேரக் கணக்கிடுகிறீர்களே! ஒரு நாளைக்கு அரை மணி நேரம் இருந்தால் போதும்.
மூரட்: ஒரு நாளைக்கு அரை மணியா? அப்படியானால் நாள் கணக்கில் திட்டமிடுகிறீர்கள் போலிருக்கிறதே!
லாரைன்: ஆம்... சில பல நாட்களாகும். ஒரேயடியாக இருப்பது உங்களுக்கும் சிரமம். எனக்கும் மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டுமல்லவா? அத்துடன்...
மூரட்: அத்துடன் என்ன? சும்மா சொல்லுங்கள்.
லாரைன்: இதைச் சாக்கிட்டுத் தங்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்கலாம் அல்லவா? இத்தகைய பட்டுக் கயிற்றினால் தானே நாடோடிப் பறவையாகிய உங்களைக் கட்டி வைக்க முடியும்?
பட்டுப் பொதியினுள் பொதிந்த அவள் காதல் அழைப்பு அவன் உள்ளத்தைக் குளிரச் செய்தது. துணிவற்ற தன் விருப்பத்தை அவள் மதித்தாள் என்பதை அவள் ஆர்வ இணக்கம் அவனுக்கு அறிவித்தது.
உரையாடல் கலப்பு உள்ளக் கலப்பாயிற்று.