19. பாதையில் கண்ட காதற் கனிவு
பாதையிற் பிறந்த பாலகன் கதை மாளிகையிற் பிறந்த மாதுக்குக் களிப்பூட்டிற்றேயன்றி, மாளிகையிற் பிறந்தோர்க்கு வழக்கமான அருவருப் பூட்டவில்லை. மூரட்டினுடைய காதல் தத்துவத்தை அறிந்தும் அவள் அவனையோ, கட்டற்ற காதல் வாழ்வு வாழ்ந்த அவள் தாயையோ பழிக்கவில்லை. அவள் உள்ளம் மலையின் சாரலில் மெல்லச் சரியும் பனிப் பாறைபோல், அவனை நோக்கிச் சரிந்து கொண்டுதானிருந்தது. ஆனால், அச்சரிவின் வேகத்தை நெடுநாள் தடுத்து நிறுத்திய குத்துப் பாறாங்கல் ஒன்று இருந்தது. அதுவே காதல் பற்றிய அவள் உயர் கருத்து.
-
உலகில் பலருக்கு சிறப்பாக அந்நூற்றாண்டின் மேலை ஐரோப்பாவுக்கு - காதல் ஓர் உடல் சார்ந்த இன்பம். அது ஆணுக்கு
ன்ப வேட்டை; பெண்ணுக்கு இன்பத் தூண்டில். வேடனது வேட்டை வெற்றியில் முடியும். அதற்கிரையான பெண்ணின் இன்பம் தூண்டிலிரையை நாடிய மீனின் இன்பம் போலச் சிற்றின்பமாய், பின் துன்பத்தையும் மீளா உளத் துயரத்தையும் இடிவையும் நல்கும். ஆணின் வெற்றி மேலும் பல வெற்றிகளுக்கு முதற்படியாய் அமையும். அவன் காதல் துறையில் எத்தகைய மாபழிகளைச் செய்தாலும் அவனுக்கு இயற்கை தண்டனை தருவதில்லை. அவன் மனச்சான்றும் மக்கள் மனச்சான்றும் அவனைக் குறை கூறுவதில்லை. பெண்ணின் தோல்வியோ மேலும் தோல்விகளுக்கு வழி காட்டுமேயன்றி மீட்புக்கு வழி காட்டாது. இயற்கையும் இரக்கமின்றி அவளைத் தண்டிக்கும். இயற்கை தன் தண்டனைகளைச் சிறிது தளர்த்தினால், மக்கள் கண்டிப்பர்.மக்கள் சிறிது கனிவு காட்டினால், அவள் மனச்சான்றே அவளைத் தயங்காது உள்ளிருந்து ஓயாது உறுத்தும்.
இயற்கையறிந்த லாரைன் இத்தகு காதலைவிட நட்பை உயர்வாக எண்ணினாள். காதல் நட்பினும் உயர்வுடையது