உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கவிஞனின் வெற்றி

பருவம், வேளை, சூழல் ஆகியவற்றின் தாக்குதல்களில் ஈடுபட்டு லாரைன் தன் உள்ளத்தை தற்காலிகமாகப் பறி கொடுத்திருந்தாள். ஆகவே, அவள் மனம் மூரட்டிடம் தான் வலியுறுத்திய உறுதியில் சற்றுத் தளர்வு கொண்டு அதனை மறந்திருந்தது. ஆனால், அவன் ஒரே நோக்கமுடையவனா யிருந்ததனால், இத்தகைய தளர்வு எதற்கும் ஆளாகவில்லை. தற்காலிகமான அவள் தளர்ச்சியை அவன் நன்கு பயன்படுத்த விரும்பினாலும், அதன் தற்காலிகப் பலனில் அவள் மனம் நாடவில்லை. அவள் தன் தவறுணர்ந்து தன் இயல்பு மறவாது நடக்கும்படி செய்யவே அவள் எண்ணினாள். ஆகவே, தன் தறுவாய்க்குக் காத்திருந்து அவன் போக்குடன் ஒத்துறவாடினாள்.

“நகரின் ஆடல் பாடல்கள் மனத்திற்குச் சிறிதுநேரம் மகிழ்ச்சி யூட்டக்கூடும். ஆனால், பூந்தோட்டங்களின் எழில், மலர்களின் வனப்பு, தென்றல் காற்றின் இனிமை, பொன்னிள வெயிலின் பூம்பொலிவு ஆகியவையே நிலையான இன்பந் தருகின்றன. இதனாலேயே ஏன் மீண்டும் நாட்டுப்புறத்தில் என் கொழுநர் பண்ணைக்கே செல்ல விரும்புகிறேன். அவ்விடத்தில் எல்லா இன்ப நிறைவும் உண்டு - நீங்களும் அங்கே உடன் இருந்தால் நிறைவு மணம் பெறும். நீங்கள் வந்து என் இலத்தீன் மொழி பெயர்ப்பில் உதவுவீர்களல்லவா?”

மூரட் புன்முறுவலுடன் “அது மட்டுமா? தங்களுடன் இருப்பதால் குடி, சூது முதலிய கீழ்த்தர இன்பங்களை விட்டு விலகி நல் ஒழுக்க வாழ்வு பெறலாம் அல்லவா?” என்றான்.

தன் மன உறுதியையே அவன் கேலிசெய்வது கண்ட லாரைனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “உன் நாத்துடுக்குத்தனத்தைக் கேட்டுக் கேட்டு என்னால் பொறுக்க முடியவில்லை" என்றாள்.