வாடா மல்லி
151
அப்போதும் அவன் நையாண்டித்தனத்தை விடவில்லை. “உடன் பிறந்தானிடம் உடன் பிறந்தாள் பேசும் அன்பு முறையா இது? உடன் பிறப்புரிமை உறுதி கூறிவிட்டு வேறு ஏதோ உரிமை கொண்டாடுபவள் போல் ஊடற் பசப்புப் பசப்புகிறீர்களே?” என்றான்.
தன் உணர்ச்சிகளைக் குத்திக் காட்டிய இவ்வவமதிப்பு அவள் உள்ளத்தின் எரிவில் எண்ணெய் ஊற்றிற்று. அவள் உண்மையிலேயே கடுஞ்சீற்றம் கொண்டாள். “ஊடல்! பசப்பு! இத்தகைய பேச்சுகளை நான் என் காதுகளால் கேட்கப் போவதில்லை. சரி, இதற்குச் சரியான வழி செய்கிறேன். என் நாட்டுப்புறத் தங்கலுக்கு உங்களை அழைத்திருந்த அழைப்பை நான் பின் வாங்கிக் கொள்கிறேன். தங்கள் தோழமை எனக்குத் தேவையில்லை. என்பிள்ளைகள் இதனால் சிறிது நேரப் போக்கிழந்தாலும் கேடில்லை. நீங்கள் அங்கே வரவேண்டாம்" என்று கூறி அவனருகிலிருந்து அவள் சரேலென்று விலகிச் சென்றாள்.
அவள் போகும்போதும் மூரட் கடகடவென்று சிரிக்கும் ஒலியே அவள் காதுகளைத் துளைத்தன.
இத்தடவை அவள் கோபம் அதன் சூழ்நிலைகளுடன் நிற்கவில்லை. மூரட்டைக் காணாதவிடத்திலும் அவன் உருவமும் அவன் நகைப்பும் முன்வந்து தோன்றி அதனைக் கிளறி விட்டுக் கொண்டே இருந்தன. அவள் வீடு வந்தபோது குழந்தைகள் ஓடி வந்து “மூரட் எங்கே, குட்டியப்பா எங்கே” என்று கேட்டபோது அவள் சீற்றம் அவர்கள் மீதுகூட அலைபாய்ந்து சிதறிற்று. உள்ளூர அவள் சினத்துக்கு அவளே ஆளாக வேண்டியிருந்தது. ஆனால், தன்னைத்தான் எந்தக் குற்றத்திற்காக குறைகூறிக் கொள்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. மூரட்டைச் சந்திக்க முடியாமல் போனது தனக்கு உள்ளூர வருத்தம் என்பதை அவள் ஒப்புக் கொள்ளும் நிலையிலில்லை. அவனைத் தான் தண்டித்தது தவறென்றும் எண்ணமுடியவில்லை. ஆனால், தண்டனை அவனைப் பாதிக்கவில்லை; தன்னைத்தான் பாதித்தது. இதனால் அவள் மனப் புகைச்சல் அவன் மீது இன்னும் மிகுதியாயிற்று.