உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ||

அப்பாத்துரையம் - 30

கையை ஏற்றபோது அவள் அவன் கன்னங்களுக்கு ஒரு முத்தம் தந்தாள்.

அவள் புன்னகை செய்தாள்.

அவளை அவன் ஆர அமர மெள்ளவே தூக்கிச் சென்றான். அவள் மேலங்கி அவன் திண்ணிய உடலில் நெருக்குண்டு கசங்கிற்று. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவள் அவன் கண்ணோக்கிலிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், அதன் மீது படர்ந்த சிவப்பு அவள் அகமகிழ்வை அவனுக்குக் காட்டிற்று.

மூரட் காதலுள்ளத்தினைக் கைப்பற்றுவதில் வெற்றி கண்டான். வெற்றி எவ்வளவு என்பது அவனுக்கு இன்னும் தெரியாது.ஆனால், தெரிந்த அளவே அவள் வாழ்வில் புத்தொளி தூண்டப் போதியதாயிருந்தது. ஆனால், இவ்வெற்றியின் மகிழ்வை வரவிருந்த பிரிவு வந்து கலைத்தது. அவன் பாரிஸ் வருமுன் ஈடுபட்டிருந்த போர்த் துறையிலிருந்து அவனுக்கு விரைவான அழைப்பு வந்திருந்தது. லாரைனின் பயணத்துக்காக அவன் தன் பயணத்தைச் சிறிது தாழ்த்திக் கொண்டிருந்தாலும், அவன் படுக்கை தட்டுமுட்டுகள் எல்லாம் முன்பே அனுப்பப்பட்டிருந்தன. இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவனும் புறப்பட்டுச் செல்லவேண்டும்.

அரும்பிய காதல், அதனை அப்படியே தொலைவில் வளரவிட்டு அவன் நாடோடி வாழ்வை மீட்டும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எத்தனை மாதத்தில், எத்தனையாண்டில் மீண்டும் ஃபிரான்சு நாடு வந்து காதலியைக் காண்பானோ, அவனுக்கே தெரியாது.

போகுமுன் தன் நினைவுக் குறியாகத் தன் காதலிக்கு ஏதேனும் கொடுக்க நினைத்தான் அவன்.

இப்போது அவர்கள் சமூக உயர்வு தாழ்வு மீட்டும் குறுக்கிட்டது. அரண்மனை வாழ்க்கைப் பரிசுகளை அரும் பொருளாகக் கொள்ளமுடியாத உயர் செல்வப் பெண்டு அவள். அரண்மனை நுழைவே தன் உடைமதிப்புக்கு அப்பாற்பட்டவன் அவன். அவளுக்கு எத்தகைய பொருளைத் தருவது? இராப்பகல் இதுவே அவன் ஓயாச் சிந்தனையாகிவிட்டது.