உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. தப்பெண்ணம்

கூடலில் பிரிவு போன்ற துன்பம் வேறில்லை. பிரிவிடையே கூடுவது போன்ற இன்பமும் பிறிதில்லை. அடுத்த இரண்டாண்டு களிலும் மூரட்டும் லாரைனும் இவ் இன்ப துன்பமிரண்டனையும் மாறி மாறித் துய்த்தனர். காரம், காரத்துக்குப் பின்னர் தித்திப்பு; தித்திப்புக்குப் பின் காரம் என்ற உணவு முறையில் தித்திப்பின் சுவையைக் காரம் பெருக்குகிறது. காரம் இடையே வந்து தித்திப்பை மட்டுப்படுத்தினாலும், அது மீண்டும் தித்திப்பின் சுவைத்திறத்தைப் பெருக்கவே உதவுகிறது. இது போலவே துன்பத்திடையே இன்பத்தை எதிர்பார்க்கும் இன்பம், அதைத் தொடர்ந்த இன்பம், அவ்வின்பத்தின் பின், பின்நோக்கி அதனை நினைக்கும் இன்பம் என அவர்கள் வாழ்க்கை நெளிந்து நெளிந்து ஓடிற்று. மூரட் அடிக்கடி நாட்டுப்புறம் வந்து தன் வீட்டில் தங்கியிருப்பான். அவ்வேளைகளில் முன்னிரவில் ஒரு உருவம் போர்வை ஒன்றைப் போர்த்துக் கொண்டு கிளைவழிகளில் நடந்துவரும். மூரட் அவ்வுருவின் வரவை எதிர் நோக்கி நின்று, அதை உள்ளே வரவேற்றபின் கதவை உள்ளிருந்து தாழிடுவான். இவ்வுருவம் வேறுயாருமன்று லாரைன்தான்! வண்டியில் வராமல் நடந்து வருவதனாலும், முகமூடி இராவேளையில் வருவதனாலும் அது இன்னாரென்று யாரும் ஐயுறவே இடமில்லாதிருந்தது. விடியற் காலையில் அவள் அவனிடமிருந்து பிரியா விடை பெற்று எவரும் எழுமுன் உட்சென்று தன் அறையில் சிறிது கண்ணயர்வாள்.

நேரே சந்திக்க முடியாத சமயம் அவள் கடிதங்கள் அவனை நாடிவரும். அவன் கடிதங்கள் அவளை நாடிச் செல்லும். அவள் கடிதங்கள் அவன் உயிராயிருந்தன. அவன் கடிதங்கள் அவளுக்கு மனப்பாடமாய் அவள் உள்ளத்தில் என்றும் நீங்காதிருந்தன. அவற்றின் உணர்ச்சி வேகம் அவளை அவன் காதலியாக விசை வண்டியில் ஈர்த்துச் செல்வது போன்றிருந்தன.