66
அப்பாத்துரையம் - 30
தன் வெறுப்பை முற்றிலும் அடக்கிக் கொண்டு, தன் வாழ்க்கை நாடகத்திடையே அவனிடம் மற்றொரு நாடகம் நடித்து வந்தாள். அரசனுடைய அரசியல் நாடகங்களுக்குப் புறம்பாகத் தான் நடத்திய கலை நாடகங்களை அவள் கண்ணில் படாமல் மாறாட்டம் செய்து வந்தாள்.
அவள் நாடகத்தின் மிகமிகப் புதுமைவாய்ந்த கட்டம்1738- ஆம் ஆண்டுக்கு உரியது. வழக்கம்போலவே அவள் ஆடினாள், பாடினாள், உரையாடினாள். அவள் காதலர்கள் எப்போதும் போலவே அவளைச் சுற்றி வட்டமிட்டு வந்தனர். ஆனால், அவ்வளவு பேருக்கும் தெரியாது. அவள் அடிவயிற்றின் நிலை. அவள் ஓட்ட சாட்டமும் சுறுசுறுப்பும் இன்பக் கேளிக்கையும் அவர்கள் கண்களை அவ்வளவு திறமையாக மறைத்தன!
போலந்து நாட்டின் தலைசிறந்த வழக்குமன்றத் தலைவர் ஒருவரே கோமாட்டி பஃவ்வர்ஸின் மிகப் புத்தம் புதிய காதலர். அவர் வழக்கறிவின்திறமெல்லாம் அவள் கையில் பம்பர மாயாடிற்று. அவளது ஒரு புன்முறுவலுக்காக அவர் ஏங்கிக் கிடந்தார். அவள் பல இளைஞருடன் களித்து வாய்விட்டுச் சிரித்துப் பேசுவாள். ஆனால், அவள் அவரை மதிப்புடன் நடத்தினாள். அத்துடன் அவள் அவரை ஒருகணம் தன்னை விட்டு அப்பாற் செல்ல விடுவதில்லை. அவர் அறிவுரைகளைக் கேட்பாள்; அவருடன் வாதாடுவாள். அவர் நட்பைப்பற்றிப் பிறரிடம் பெரிதாகப்பேசி, அவரைத் தன்னிடம் ஈடுபடுத்துவாள். அவள் கலைச்சுவைத் திறத்தைப் புகழ்ந்து, அவரை அடிக்கடி இன்பக் கனவுலகுக்கு ஏற்றி இறக்குவாள்.
ஒருநாள் வழக்கு மன்றத் தலைவரிடம் அவள் திடுமெனத் தன் முறைகளை மாற்றினாள். அண்மையிலுள்ள நகரத்துக்குச் சென்று சில துணிமணிகள் வாங்க வேண்டுமென்றும், அச்சமயத்தில் தான் அவர் தோழமையை விட விரும்பாததால், தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணுவதாகவும் அவரிடம் அவள் கூறினாள். அவர் இப்புது வாய்ப்பை ஆர்வத்துடன் வரவேற்றார். இருவரும் ஒரே வண்டியிலேறி நகர் சென்றனர். நகரில் பொருள்கள் வாங்கியபின் அவள் வண்டியோட்டியை வேறு வேலை கொடுத்தனுப்பி விட்டாள். அவன் வருவதற்காகக் காத்திருப்பவள் போல் அவள் பிற்பகல் வரை நகரில் தங்கினாள்.