வாடா மல்லி
75
சமையற்காரன்: "இவன் யாரென்பது யாருக்கும் தெரியாது. தன் குள்ளத் தன்மையால் முதலில் எல்லார் இரக்கத்தையும் மன்னர் விருப்பத்தையும் கவர்ந்தான். மன்னர் சலுகைகள் பெறுந்தோறும் அவன் அகமும் பிடிவாதமும் குறும்புகளும் உச்ச நிலைக்கு ஏறிவிட்டன. இப்போது அவனைக் கண்டால் எவருக்கும் அச்சம். மன்னன் அவனிடம் வைத்த நம்பிக்கையால் பலரை அவன் மன்னனுக்காகாதவர்கள் ஆக்கி விட்டான். இப்போது அவன் பிடிவாதம் அரசனையும் மிஞ்சித் தான் போகிறது. ஆனால், எவர் போக்குக்கும் விட்டுக்கொடுக்காத அரசன் அவனுக்கு விட்டுக் கொடுத்து வருகிறான். சரி இது கிடக்கட்டும். அவன் திசைக்கு நீ போக வேண்டாம். இப்போது நீ பசியாயிருக்கிறாய், இதோ இவற்றைச் சாப்பிடு" என்று தன் சட்டைப்பைகளில் கொண்டு வந்த தின்பண்டப் பெட்டியைத் திறந்து வைத்தான்.
சிறுவன் வேறொன்றும் பேசாமல் பசியார்வத்துடன் சிற்றுண்டிகளை எடுத்தருந்தினான்.
அப்போது அடிசிற் களத்தின் மேற்பார்வையாளன் அங்கே வந்தான். சமையற்காரன் அவனைச் சிறுவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். “ஸ்டானிஸ் லாஸ், இவன் ஒரு கலைஞன். ஆனால் மற்றக் கலைகளுடன் சமையல், சிற்றுண்டிக் கலைகளையும் கலந்து நம் போலந்து அரண்மனைச் சமையலுக்கே ஒரு புதுமை அளித்திருக்கிறான்."
சிறுவன்: சமையற் கலையில் மற்றக் கலைகளுக்கு மேது? இருந்தாலும் அத்திறத்தின் பயன் என்ன?
மேற்பார்வையாளர் சிரித்துக்கொண்டு “நேரே பார்க்கும் வரை எல்லாரும் அப்படித்தான் கூறுவார்கள். என் கலையின் தன்மைகளில் சிறவற்றை இதோ பார்" என்று ஒரு புத்தகத்தை நீட்டினான்.
புத்தகத்தில் நிறையப் படங்கள் இருந்தன. சில சிற்றுண்டி களைப் பலவகையில் அடுக்கி வைக்கும் முறைகள், சில சிற்றுண்டி கள் செய்யுமுறை பற்றிய விளக்கங்கள். சிறுவன் கவனம் படங்களில் தான் பெரிதும் ஈடுபட்டது. “இதெல்லாம் சரி, அரண்மனையில் இது எவ்வகையில் பயன்படும்?” என்று கேட்டான்.