வாடா மல்லி
81
சமயத்தைப் புறவேடமாகக் கொண்ட அரண்மனையின் இன்ப வாழ்வினர் அவர் சமயத்தைத் தாக்கி வசைபாடுவது கேட்டு மகிழ்ந்தனர். அதுவும் கலைமரபு சார்ந்த வேடமென்றே கொண்டனர். முதல் நாளிலேயே உணவு மேடையில் அவர் கடவுள் வணக்கம் செலுத்தும் பொறுப்புத் தரப்பட்டது. ஆனால், அவரோ “கடவுள் தரும் உணவை உண்பதைவிட உயர் வணக்கம் எதுவும் நான் அறியேன்” என்றார். இன்ப வாழ்வுப் போக்குக்கு அவர் தந்த புது விளக்கம் எல்லாருக்கும் பிடித்தமாகவே இருந்தது. அடிக்கடி "பைபிளையும் வழிபாட்டு ஏடுகளையும்விட எனக்கு வால்ட்டேரிடமே மிகுதி விருப்பம்” என்பார். இது அவர் காலத்துக்கேற்ற அறிவுத்திறம் என யாவரும் போற்றினர்.
நாள் முழுதும் இன்ப வாழ்வில் கழித்துவந்த அரசன் நாளிறுதியில் உறங்குமுன் விவிலிய நூலுரை கேட்டுத் தன் உள்ளார்ந்த சிறு பழி பாவங்களைக் கழுவிக்கொண்டு விடுவதுண்டு. அப்பே பார்க்கெட் ஒரு நாள் இங்ஙனம் விவிலிய நூல் வாசிக்கும் பணி தரப்பட்டார். அன்று துறவியும் தம் சமயக் கட்டுப்பாடுகளெல்லாம் துறந்து நன்கு உண்டு குடித்துக் குடிமயக்கத்தில் பாதியும் சோர்வு காரணமான உறக்க மயக்கத்திலும் ஆழ்ந்திருந்தார். அவர் கண்முன் விவிலிய நூலின் எழுத்துகள் கூளிகளாகவும் குறளிகளாகவும் துள்ளிக் குதித்தாடின. ஆகவே, “கடவுள் கனவில் பிறங்கும் ஒளி உருவுடன் யாக்கோபின் முன் தோன்றினார்" என்று வாசிக்குமிடத்தில் ‘கடவுள் கவின் மிக்க குரங்குருவுடன் யாக்கோபின் முன்வந்து தோன்றினார்' என்று படித்தார். அரைக் குடிமயக்கத்தில்கூட அரசனுக்கு இது பொருத்தமற்ற வாசகம் என் தோன்றிற்று. “என்ன அடிகளே, கடவுள் குரங்காகவோ தோன்றினார்?” என்று கேட்டான். “ஆம் அரசே, கடவுள் எல்லா வடிவிலும் தோன்றுவார். விரும்புவார் விரும்பும் வடிவிலெல்லாம் விளங்குவான் எம் மெய் இறைவன்” என்று துறவி விளக்கம் தந்தார்!
கோமாட்டியிடம் அப்பே பார்க்கெட் எப்போதும் காதல் துறை சார்ந்த உவமைகளிலும் நயநுட்பங்களிலுமே ஊடாடினார். அவள் அவர் துறவி என்பதைக் கூட மறந்து அவருடன் காதல் விளையாடல்கள் விளையாடினாள்! யார் யார் எத்தகையவர் என்றறிந்து அவ்வவர்க்கேற்ற உருவும் பண்பும் உடையவராய், ஒரு