152
||--
அப்பாத்துரையம் - 31
என்று அவள் உள்ளத்தினுள்ளே ஒரு குறும்புப் பெண் உருவம் ஒரு ஆண் அடிமையுருவிடம் கூறிக்கொண்டது.
மாதவன் அன்றும் பூவரங்கின் பக்கம் செல்லவில்லை. ‘இந்து அவன் வரவுக்கே காத்திருந்தாள். அவனும் அவளை எண்ணிய வண்ணமேகாலுக்கும் கண்ணுக்கும் தடைபோட்டுக் காத்திருந்தான். மாலை அனுப்புதல், விழித்திருந்து தொப்பி தைத்தல் ஆகியவற்றால், அவள் உள்ளநிலை அவனுக்கு இப்போது ஒருவாறு புலப்பட்டிருந்தது. ஆயினும் அவள் தன்னைக் காதலில் இழையவிட்டு வேடிக்கைதான் பார்க்கிறாள் என்று அவன் எண்ணினான்.அவள் தன் வாழ்க்கையை அவன் வாழ்வுடன் இணைக்க எண்ணவில்லை என்று கருதினான்.
அவன் மனம் மேலும் கொதித்தது. மேலும் இரும்பாயிற்று.
அன்று இரவு வழக்கமீறி அவன் மனம் அமைதியிழந்தது.நிலா முற்றத்தில் சொரிந்த பால் ஒளிஅவன் நாடி நரம்புகளை அலைக்கழித்தது. அவனால் இருப்புக் கொள்ள முடியவில்லை. முற்றத்திலேயே இறங்கினான். முன்னும் பின்னும் நடந்தான்.
இரவு நள்ளிரவு கடந்ததை அவன் அறியவில்லை.
அவன் கால்கள் அவனை அறியாமல், பூவரங்கு மாளிகையின் பக்கம் சென்றதையும் அவன் அறியவில்லை.
தண்ணிலவு காய்ந்து கொண்டிருந்தது.தண்ணிலவில் காய்ந்து கொண்டேஅவன் சுழன்று சுழன்று உலவினான்.
இந்துலேகா பகலும் இரவும் அவனை எதிர்பார்த்து எதிர்பார்த்து, நள்ளிரவில், நிலாமேடையில் வந்து நின்றிருந்தாள். அவன் வரவும்போக்கும் கண்டு அவள் அவன் கவனத்தைத் தன் பக்கம் திருப்பச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
'மாது,மாது!' என்ற குரல் கேட்டு அவன் நிமிர்ந்தான்.
அவன் உள்ளம் துடித்தது. ஆனால் அவன் அறிவு அவனைத்
தடுத்து நிறுத்திற்று.
‘ஏன்!' என்று மட்டும் அவன் குரல் கொடுத்தான்.
'அங்கே பனியில் ஏன் உலவுகிறாய் மாது! இங்கே இப்படி வருவது தானே!' என்றாள்.