154
அப்பாத்துரையம் - 31
உணர்ச்சிகளைத் துன்பக்கேணியில் கொட்டிவந்த மாதவன் இப்போது கரையில்லாத இன்பக் கடலில் திளைத்து மிதந்தான். உணர்ச்சிகளை அடக்க அரும்பாடுபட்டு நடித்த நங்கையும் நடிப்பை விட்டுவிட்டுக் கட்டற்ற காதலில் குளித்தாள். ஊடுவதற்கு நேரமில்லாத இடையறாக் கூட்டுறவில் அவர்கள் இருவரும் பல நாழிகை, பலநாள், பல வாரங்கள் ஓட்டினர்.
இறுதியில் ஒருநாள் நள்ளிரவில், முழுநிலாச் சான்றாக, கேரளத்தின் பண்டைப் பண்பாட்டின் மரபிலே, அவர்கள் இருவரும் 'உயிர்பிரியினும் பிரியோம்' என்ற மாறாத உறுதியுடன் தமக்கிடையே மணஉறுதி மொழி கூறிக் கொண்டனர்.
அந்த உறுதியின் இடையறா நினைவூட்டாக, இந்து அவனைக் கண்ணாளா என்றே அழைத்தாள். அவனும் அவளைக் கண்மணி என்றே அழைத்தான். அடிக்கடி இந்து அவனைக் குறிக்கும்போது நீ என்று தொடங்கி விடுவாள் - பின் தயங்கிப் புன்முறுவலுடன் நீங்கள் என்று தொடங்குவாள். ஆனால் புதிய பன்மையை அவள் முழுவதும் உச்சரிக்க மாதவன் விடுவதில்லை!
அவர்கள் புதுத்தொடர்பு மெல்ல மெல்ல எல்லாருக்கும் தெரிந்த உருவாயிற்று. இருவரிடமுமே அன்பும் நேசமும் கொண்ட தரவாடு முழுவதும் அதை மனமுவந்து ஏற்றமைந்தது. காரணவர் பஞ்சுமேனவன் கூட இதற்குத் தடை ஏதும் சொல்லவில்லை. இதற்கு ஆர்வ ஆதரவு காட்டாவிட்டாலும், மற்றெல்லாச் செய்திகளிலும் அவர் இந்துலேகா விருப்பத்தில் குறுக்கிடாதது போலவே, இதிலும் குறுக்கிடாமல் வாளா அமைந்திருந்தார்.
சின்னன் படிப்புப் பற்றிய சச்சரவு இந்த அமைதியான சூழ்நிலையிடையே, ஒரு புது மாறுதலை மெல்லப் புகுத்தத் தொடங்கிற்று.