உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

4

1233

ஹன்ரியின் பழந்தோழருள் இப்போருக்குப் பின்னும் மீந்தவன் பிஸ்டல் ஒருவனே. அவன் ஃபுளூவெல்லினைப் பலர் முன்னிலையிலும், "பச்சைப் பன்றித்தோல் தின்னும் வேல்ஸ் நாட்டினன்," என எள்ளியதுடன், "வெறும் தோல் தின்ன வேண்டா, இந்த உப்பைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்," என உப்பை நீட்டினான். இவ் அவமதிப்பைப் பொறாத ஃபுளூவெல்லின், பன்றித் தோலை மடியில் வைத்திருந்து, தனிமையில் அவனைக் கண்டவுடன் அவனை நையப் புடைத்து, “என்னைப் பச்சைப் பன்றித் தோலைத் தின்னச் சொன்னதனால் நீ காய்ந்த பன்றித் தோலையேனும் தின்னுக,” என்று வற்புறுத்தித் தின்ன வைத்தான். இத்துடன் பிஸ்டல் தன் ஊக்கங்குன்றி உள்ளழிந்தான்.

அஜின்கோர்ட் வெற்றியின்பின் ஹென்ரி பல நகர்களைப் பிடித்து ஃபிரான்சு நாட்டினுள் முன்னேறினான். இறுதியில் தம் இறுமாப்பு முற்றும் விட்டு ஃபிரெஞ்சு அரசனும் டாஃபீனும், ஃபிரெஞ்சுப் பெருமக்களும் ஹென்ரியின் காலடியில் வீழ்ந்து அமைதி வேண்டி மன்றாடினர். ஃபிரெஞ்சு அரசன் தன் மகள் காதரைனை ஹென்றிக்குத் தந்தான். அதோடு சார்லஸுக்குப் பின் ஹென்ரியையே அரசனாக்க வேண்டும் என்ற வரையறையுடன் உடன்படிக்கை ஏற்பட்டது. சிறைப்பட்ட ஃபிரெஞ்சுப் பெருமக்களும் அவ்வுடன்படிக்கையின் பயனாக விடுதலை பெற்றனர்.

காதரைனுக்கு ஆங்கிலம் நன்கு தெரியாது. ஹென்ரி அரசனுக்கு ஃபிரெஞ்சும் அப்படியே. அதோடு போரில் மட்டுமே இடுபட்ட ஹென்ரிக்குக் காதற்போரின் முறைகள் புத்தம் புதியவையாகத் தோன்றின. போர் உடன் படிக்கையால் வலியுறுத்திப் பெண் பெறும் முறையும் காதலுக்கு உகந்ததாகத் தோன்றவில்லை. எனினும் உய்த்துணர்வும் நகைச் சுவையுணர்வும் மிக்க காதரைன் ஹென்ரி அரசனை வரவேற்று அவன் உள்ளத்தன் நிமிர்ந்த வெற்றி இறுமாப்பைத் தன் பக்கமாக வளைத்துக் கொண்டாள். அவளுடன் ஹென்ரி இனிது அரசு வாழ்வு நடத்தினான்.