வாழும் வகை
189
செய்வதில்லை. ஆயினும் ஒவ்வொருவரும் ஒரு தேவைக் கூற்றிலேயே பலர் தேவைகளைக் கவனிப்பதால் மொத்தத்தில் மனித வகுப்பு முழுவதன் தேவைகளையும் அவ் வகுப்பின் ஒரு சிலரே செய்து முடிக்க முடிகிறது. மனிதன் தேவைக்குமேல் பொருள்கள் குவிவதும் இதனாலேதான். தேவைகள் வளர்வதும் இதனாலேயேயாகும்.
கூட்டுறவின் பயனை உயர்தர வகுப்பு மிகுதி பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் சிலர்; அதுவும் உழைப்பற்றவர். உழைப்பற்றவர் கூட்டுழைப்பின் பயனை எப்படிப் பெறமுடியும்? அவர்களிடையே உள்ள போட்டி அவர்களைப் பிரித்து வைக்கிறது. தங்கள் தங்கள் பொதுச் சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு துறையில் மட்டும்தான் அவர்கள் கூட்டுழைப்புச் செய்யமுடியும். தொழிலாளர்களோ கூட்டுழைப்பின் பயனை படிப்படியாகத் தான் உணர்ந்து வருகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கும் வரை தொழிலாளரும் எளிதில் ஒற்றுமைப்பட முடியாது. ஆகவே, நடுத்தர வகுப்பினர் மட்டுமே கூட்டுறவின் பெரும் பயனை இன்று உலகில் துய்க்கின்றனர். அதன் பயனாக அவர்கள் அடைந்த முன்னேற்றம் மிகமிகப் பெரிது. மற்ற வகுப்பினர் பல தலைமுறையில் அடையும் முன்னேற்றத்தை அவர்கள் ஒரே தலைமுறையில் அடைய முடிகிறது. அவர்கள் நாகரிகமே வரவர மனித நாகரிகமாய் வளர்ந்து கொண்டு வருகிறது.
தொழிலாளர் கூட்டுறவின் பயனை அறிந்து அதைப் பயன் படுத்தினால், நடுத்தர வகுப்பினரைவிட அவர்கள் வளர்ச்சியடைய முடியும் என்பதில் ஐயமில்லை. அவர்கள் உழைப்பால்தான் இன்று பொருள்கள் உண்டுபண்ணப்படுகின்றன. ஆனால், இவைகள் இன்று கூட்டுழைப்பல்ல; தனி உழைப்பு. ஏனெனில் அவர்கள் உழைப்பின் மூலப் பொருளுக்கு, உழைப்புக் கருவிக்கு உரியவர்களல்ல.அவர்கள் உழைப்பின் கூட்டுப் பயனை அவர்கள் பெறமுடியவில்லை. அவர்கள் சேமிப்பில் தங்கள் கூட்டுறவைக் கூட்டினால், அவர்கள் உழைப்பும் எளிதில் தங்கள் கூட்டுழைப்பாய்விடும். ஒவ்வொருவர் சிறுசிறு சேமிப்பும் கூட்டாகச் சேர்க்கப்பட்டால், விரைவில் அவர்கள் தொழிலை அவர்களே நடத்தத்தக்க முதலீடாய்விடும். இன்று அவர்கள்