வாழும் வகை
233
அவர் அவர்களை வெளியே காக்கவைத்திருந்துவிட்டு நெடுநேரம் சென்றபின் வந்து, "ஐயன்மீர், உங்கள் நலம் என் அழிவா யிருக்கிறது. நீங்கள் இருப்பது நான் வெளியே போவதைத் தடுக்கிறது,” என்று கூறி அனைவரையும் சிரிக்கவைத்துத் தம் க்கட்டிலிருந்து அன்றைக்குத் தப்பினாராம்! கடன் தீர்க்க இறுதிக் காலத்தில் அவர் பின்பற்றிய வழி கைக்கூலி வாங்குவதாக முடிந்தது. தம்காலப் பேரறிஞராகிய அவர் இதனால் குற்றஞ் சாட்டப்பெற்றுத் தண்டனை பெற வேண்டியதாயிற்று.
பேக்கனைவிட மன்னிக்கமுடியாத குற்றவாளி வில்லியம் பிட் ஆவர். பேக்கன் அறிஞர்; பிட்டோ பொருளியலறிஞர். நாட்டின் பொருளியல் துறை நெருக்கடியை மற்ற எவரையும் விடத்திறம்படத் தீர்த்துவைத்துப் புகழ் பெற்றவர் அவர். ஆனால், அவரால் தம் வாழ்வின் பொருளியல் நெருக்கடிகளைச் சிறிதும் தடுக்கமுடியவில்லை. பொருளக வல்லுநராகிய காரிங்டன் ஒருமுறை அவர் தனிப்பட்ட செலவினங்களை ஆராய்ந்து பார்க்க முற்பட்டாராம். அவர் வீட்டில் இறைச்சிக்கறி வாரம் ஒன்றுக்கு ஓர் அந்தர் ஆகியிருந்ததாம். பணியாட்கள் ஊதியம் முதலிய வீட்டுச் சில்லறைச் செலவுகள் ஆண்டுக்கு 2,300 பொன் ஆயினவாம். அவர் ஆண்டு வருமானம் என்றும் 6,000 பொன்னுக்குக் குறைந்ததாயிருக்கவில்லை. ஐம்பெருந் துறையின் காவலனாக அவர் இருந்ததால் இன்னும் 4,000 பொன் வந்தது. ஆயினும் இப் பெருஞ் செலவின் காரணமாக, அவர் மறைவின் போது அவர் பிரிவு விழாவைக் கறைபடுத்தும் அளவு கடன்காரர் வந்து சூழ்ந்தனர். நாட்டுக்கு நற்பணி செய்த அந் நல்லார் புகழ் காக்க, அரசியலார் 40,000 பொன் தந்து அக் கடனாளிகளின் கூக்குரலை அடைத்தனர்.
கடன்பட்ட பெரியோர்களிடையே ஒரு முடிசூடா மன்னன் என்று கூறத்தக்கவர் ஷெரிடன். அவர் வரவுக்குமிஞ்சிச் செலவுசெய்து கடன்பட்ட கடனாளியல்லர்; கடன் வாங்கிச் செலவுசெய்த கடனாளி. அவர் வாங்கிய கடன்கள் மிக மிகப் பெரிய தொகைகள். அந்தப் பெருந் தொகைகள் எப்படி, எங்கே செலவாயின; என்னவாயின என்று எவரும் அறிந்தது கிடையாது. அந்தக் கடனாளிகளுள் எவரும் கொடுத்த கடனில் ஒரு துட்டுக்கூடத் திரும்பப்பெற்றதும் கிடையாது. ஆயினும்,