266
II-
அப்பாத்துரையம் - 42
இறுமாப்புக்கொள்வதும், பிறர் காண இறுமாந்து நுகர்வதுமே என்று கருதப்பட்டு வருகிறது. ஆதாய நோக்குடன் செல்வரும், ஆட்சித்திற நோக்குடன் அரசியலாரும், ஆட்சி எல்லைவிரிவு நோக்குடன் வல்லரசுகளும் வாழும் திறம்பட்ட ஒத்துழைப்பை யல்லாமல், மக்கள் வாழ்வில் ஒத்துழைப்போ, ஒருவருக்கொருவர் உதவியோ, இன்றைய சமூகத்தில் காணமுடியாத செயல்கள் ஆகி வருகின்றன. வீட்டின்பமும் குடும்ப அமைதியும் இன்று நாகரிக நோக்கமாகவோ சமூக வளர்ச்சியின் அடிப்படைக் கூறாகவோ இல்லை. உச்சநிலைச் செல்வரை நோக்கி, பகட்டான வாழ்வையும் சோம்பலின்பத்தையும் நோக்கி முன்னேறுவதற்கே குடும்பம், கல்வி, கலை ஆகியயாவும் இன்று கருவிகளாகக் கருதப் படுகின்றன.
இன்றைய பொருளியல் வாழ்க்கைமுறை நகரங்களை மாடமாளிகைகளிடையே குச்சுக்கள், அகல் தெருக்களிடையே சந்துபொந்துகள், பூங்காக்களிடையே சாக்கடைக் குழிகள், கழிசடைகள், நச்சுக்காற்று, தூசி, புகையடர்ந்த காற்றுவெளி ஆகியவற்றையுடைய மீளா நரகங்கள் ஆக்கியுள்ளன. அதே சமயம் அது நாட்டுப்புற மக்கள் வாழ்க்கையின் ஆதாரங்களை அழித்து அந்த நகர வாழ்வின் நரகங்களை நோக்கி விரைந்தோடும் நிலையை, அல்லது அதை எண்ணி ஏங்கும் நிலையை அவர்களுக்கு உண்டுபண்ணியுள்ளது. மனிதன் இயற்கையை வென்றது, வென்று வருவது உண்மை; ஆனால், அவன் மனிதப்பண்புகளை இயற்கையற்ற அவன் செயற்கைவாழ்வு மறைத்து வருகிறது!
மனிதன் செலுத்தும் ஊர்திகள் வானவெளி கடந்து விரைந்து செல்லலாம்; அவன் வாழ்வு குறுகிவருகிறது. அவன் கருவிகள் முன்னேற லாம்; அவன் பின்னேறியே வருகிறான்-கருவி முன்னேற்றம் அவன் உடலை முன்னேற்றவோ உளப்பண்பை உயர்த்தவோ இல்லை. மனிதன் அறிவும் ஆற்றலும் வளர்கின்றன- அவன் சமூகத்தின் சமநிலை வரவரக் கெட்டு வருகிறது. சமூகத்தின் ஒவ்வொரு வகுப்பும் சீரழிந்து மொத்தத்தில் சமூகப் புறத் தோற்றம் மட்டும் வளர்ந்து சமூகம் நலிகிறது.
வீடு, ஊர், நகர் ஆகியவற்றின் தூய்மை மக்கள் வாழ்வின் புறத் தூய்மையையே பெரிதும் பேணவல்லன. இப் புறத்தூய்மை