உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழும் வகை

271

தொழிலாளர்களில் உயர் ஊதியம் பெறுபவர்கூடத் தம் வருவாயில் குடிக்கும் பகட்டுக்கும் வெளியாரவார இன்பங் களுக்கும் செலவுசெய்யும் செலவில் மிகக் குறைவாகவே உடல்நலம், உளநலம் ஆகிய நற்பண்பு தரும் இனிய குடும்ப இல்ல அமைதிக்குச் செலவுசெய்ய முனைகின்றனர். இது அவர்கள் வருந்தத்தக்க அறியாமையைத்தான் காட்டுகிறது. வருவாயில் எத்தனை உயர்விகிதம் இல்ல அமைதிக்கும் இன்பத்துக்கும் செலவாகிறதோ, அந்த விகிதத்தில் அவர்கள் வாழ்க்கை இன்பகரமாய் அமைவதுடன் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து, வருவாயும் பெருக வழி ஏற்படுகிறது. தொழிலாளர்களுக்காகப் பாடுபடுவதாகப் பறைசாற்றும் இயக்கங்கள் ஊதிய உயர்வுக்கு மட்டும் போராடி நிற்பதும் அறியாது அல்லது அறிந்து செய்யும் வழுவேயாகும். ஏனெனில், தொழிலாளர்களிடம் மீத்துவைப்பு, வாழ்க்கைத்தர உயர்வு, இன்பம் ஆகியவற்றைப் பெருக்குவதன் மூலம் அவ்வியக்கங்கள் அவர்கள் ஊதியத்தை எளிதில் உயர்த்துவதுடன் நில்லாது, அவர்களையும் முதலாளிகள் வெட்கப்படும்படியான உயர்தர நல்வாழ்வு வாழச் செய்துவிடும்.

முதலாளிகளும் தொழிலாளர் இயக்கத்தாரும் அரசிய லாரும் தொழிலாளரை உயர்த்தவும் அதன்மூலம் அதே சமயம் தம்மை உயர்த்திக் கொள்ளவும் விரும்பினால், அதற்குரிய மிகச் சிறந்தவழி அவர்களுக்கு நல்ல இல்லம் அமைத்துக் கொடுத்து, கல்வி, குழந்தைவளர்ப்பு ஆகிய வசதிகளின் மூலம் நல்வாழ்வின் சுவையை ஊட்டுவதேயாகும். தவிர வீட்டமைதிக்குத் தெரு அமைதியும் நகரமைதியும், இவற்றிற்கு நாட்டமைதியும் அடிப்படைத் திட்டமிட்டுத் திருத்தப்படுவது பொருளியல் முறையில் எவ்வளவோ சிக்கனமானது. மோசமான வீடு, தெரு, நகர், சமூக சமய வகுப்புமுறை ஆகிய எல்லாத் துறைகளிலும் பழமையை வைத்துக் கொண்டு சிறுகச் சிறுகத் திருத்தும் முயற்சி தற்காலிகமாகச் சிறு திருத்தச் செயலாகத் தோற்றினாலும் என்றும் திருந்தாத நிலையான செலவாய்விடும். எத்தனை தொடக்கச் செலவு ஆனாலும் பழைய நோயடைந்த வீடு தெரு நகர்களையும், தீம்புமிக்க சமூக முறைகளையும் அழித்துப் புதிதாக நல்ல அமைப்பு ஆக்குதல் நீடித்த நிலையான ஆக்கம் தரும்.