282
அப்பாத்துரையம் - 42
சிலசமயம் பொருள் இருந்தும் தேவைக்கேற்ற இடத்தில் இராது. அல்லது தேவை நேரத்துக்கு உதவாது. தேவைக்குக் குறைந்த அல்லது போதாத பொருள் இருக்கலாம். அப்போதும் நிலை அதுவே. குழவியில்லாத அம்மி, சாவி இல்லாத பூட்டு முதலியன நிறைய இருந்தாலும் பயன்படாது; இல்லாவிட்டாலும் பயன்படாது. பலர் ஒரு படுக்கை வேண்டிய இடத்தில் பல படுக்கை வைத்திருப்பார்கள். ஆனால், ஒன்றேனும் தூயதாய், கிழிசலற்றதாய் இராது. வேண்டாதவற்றைக் குறைத்து வேண்டியவற்றைப் பெருக்குவதும், மிகுதி வேண்டியவற்றைப் பெருக்கி மிகுதி வேண்டாதவற்றைச் சுருக்குவதும், காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற தேவைகளை அவ்வவ் வகையில் அமைத்துக் கொள்வதும் வாழ்க்கை வளத்துக்கு மிகுதியும் இன்றியமையாதவை.
ஒழுங்கமைதி விருப்பம் இயல்பாகவே அதற்கான உழைப்பையும் சுறுசுறுப்பையும் ஊக்கும்; திட்டம் வகுக்க அது தூண்டுவதால் காலந் தவறாமை, விடாமுயற்சி ஆகியவை அமையும். மேலும் ஒழுங்கமைதி விரும்புபவன் தேவையில்லா இடத்தில் கடுஞ்சொல் கூறமாட்டான்; எவரிடமும் அன்பாயி ருப்பான். தான் மகிழ்ச்சியடைவதற்குப் பிறர் மகிழ்ச்சியும் பேரளவு தேவையாதலால், பிறரை மகிழ்விக்கவும், பிறர் துன்பம் அகற்றவும் அவன் பாடுபடுவான்; நன்னடத்தையும் அவன் ஒழுங்கமைதியில் இடம் பெறும். ஏனெனில் அவன் நேரம், இடம் ஆகியவற்றையும் அதைப்போல ஆளையும் தகுதியறிந்து நடத்துவான். தான் பிறரை மதித்தாலன்றி, தனக்கு மதிப்புக் கிட்டாதென்பதை அறிந்து அவன் எவரையும் நன்மதிப்புடன் நடத்துவான். கடுஞ்சினமும் சிடுசிடுப்பும் வாழ்க்கைச் சிக்கன மன்று என்று கண்டு அவற்றை அவன் விலக்குவான்.
அருளிரக்கம், நன்னடத்தை ஆகியவற்றுக்கு எத்தகைய கைம்மாறும் செய்பவர்கட்குத் தேவைப்படுவதில்லை. நல்லது செய்த மனநிறைவும் மகிழ்ச்சியுமே, அவர்கள் உள்ளத்திற்கு நிறையின்பமும் அமைதியும் தரும். ஆனால், சிற்சில சமயம் அவற்றுக்கு ஆட்பட்டவர் மனத்தில் எழும் நல்லுணர்ச்சி எதிர்பாராக் கைம்மாறு தருவதும் உண்டு. தன் வேலையில் மிகவும் பரபரப்புடன் ஈடுபட்டிருந்த ஓர் அம்பட்டனிடம் அதைவிடப்