உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரை முத்தாரம்

45

பயன்படுத்தப்பட்டிருந்தன. மாய மந்திரக் கதைகள் புனைவியல் வீரர் கதைகளை உருவாக்கின. வனதெய்வங்கள், குறளிகள், கூளிகள், பேய்கள், பிள்ளைப் பூச்சாண்டிகள் ஆகியவர்கள் பற்றிய கதைகள் எழுந்து சிலுவைப் போர்க்காலங்களில் கிறித்தவர், கிறித்தவரல்லாதவர் ஆகிய எல்லாரிடமும் ஆர்வமூட்டின. ஒருபுறம் புதிய கிறித்தவ சமயத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே இக் கவிதைகள் மக்களை உணர்ச்சி வகையில் மக்களின் குழந்தைப்பருவ நிலையில் வைக்க உதவின. ஆனால் ஸ்பெயினில் டான்குவிக்ஸொட் இப்பேய் குறளிகள் உதவியில்லாமலே இதே வகைக் கதையார்வத்தையும், அதனுடன் நகைச்சுவை, வசைத் திறத்தையும் ஊட்டினான் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிர ஆண்டாக உரோம ஒளிவீழ்ச்சியின் பின் இத்தகைய இருண்ட நிலையில் நடமாடிய கவிதை 15-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கிரேக்க, இலத்தீன இலக்கிய மறு மலர்ச்சியால் மீண்டும் தலைதூக்கிற்று. ஆனால் ஐரோப்பிய மொழிகளில் முதலில் கவிதை காத்திய ஆடையிலேயே வெளிவரமுடிந்தது. கிரேக்க இலத்தீன யாப்புமுறை காத்திய மொழியின் மரபில்வந்த ஐரோப்பிய மொழிகளில் எளிதில் அமைவுபெற முடியவில்லை. காத்திய மரபின்படி அமைந்த எதுகை மோனை அடிகளிலேயே கவிதை தத்தித் தத்தி நடந்து கருத்துத் தெளிவுபெற்று, பண்டைக் கவிதைச் செவிலியின் கரம்பற்றி வளரத் தொடங்கிற்று. ஆனால், இங்கேயும் ஒரு புதிய தடைக்கல் ஏற்பட்டது. இலத்தீன் கிரேக்க கவிதை அந்நாளைய பலதெய்வ வணக்க அடிப்படையில் சமயக் கருத்துக்களை அணிமணியாகவும் புனை கதைத்தளமாகவும் கொள்ள முடிந்தது. புதிய கிறித்தவ சமயம் இப்பொய்யுரை புனைந்துரை களுக்கு இடந்தரவில்லை. ஸ்பென்ஸர் பழையமாதிரிப் புனை கதையிலேயே புதிய கருத்தும் அறிவுரையும் இணைத்துப் பாரிய கவிதை இயற்றினார்.

17-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய மொழியாளர் பண்டை நூல்களில் சிறுகச் சிறுகப் புதிய புனைந்துரை, வசையுரை ஆகியவற்றையே தம் கவிதையின் தலைமைப் பகுதியாகத் தேர்ந்தனர்.