கட்டுரை முத்தாரம்
71
நேரத்தில் என் வரவுக்காக நன்றி தெரிவிப்பது போலிருந்தது. அவள் உதடுகள் சிறிது அசைந்தன. நான் கூர்ந்து காது கொடுத்தேன். "இந்த நேரத்தில் உங்கள் நண்பரைத் தனியே விட்டுவிடாதீர்கள்" என்ற வாசகம் மிக மெல்லிய குரலில் வெளிப்பட்டது. அது கிட்டத்தட்ட அவள் இறுதி மூச்சின் வலிவாயிருக்க வேண்டும். அவள் கண் மேல்நோக்கியது. அதில் இன்னதென்று கூறவொண்ணாத அமைதியின் கனிவு சிறிது நேரம் ஒளி வீசிற்று. பின் அது சாவின் வண்ணத்தில் கலந்தது. அவ்விறுதிக் கனிவு அவள் குடும்ப வாழ்வின் நிறைபண்புக்கு ஒரு சான்று. கடமை நிறைவேற்றிய தன் உள்ளத்தை அவள் கடவுளிடம் ஒப்படைத்தாள்.
உயிர் அவள் உடலை விட்டேகிற்று. நண்பன் உறுதி அவன் உள்ளத்தைவிட்டு அகன்றது. அவன் அழவில்லை, கதறவில்லை. ஒரே ஒரு வேதனைக் குரல் அவனிடமிருந்து வெளிப்பட்டது. அவன் உணர்விழந்து சாய்ந்தான். கீழே விழாது நான் அவனைத் தாங்கிக் கொண்டேன். பிள்ளைகள் அனைவரும் கொண்ட திகிலை அளவிட்டுக் கூற முடியாது. தாயிறந்த துயரிடையே தந்தையையும் இழந்தோமோ என்று அவர்கள் கலக்கமுற்றனர். கல்லும் உறுதிகெடும் அந்த நேரத்தில் என் நண்பன் பற்றிய கவலை ஒன்றே எனக்கு நிலை தந்தது. நான் அவனைப் பக்கத்தறைக்கு இட்டுச் சென்று முகத்தில் நீர் தெளித்து விசிறி, அவனை உணர்வு நிலைக்குக் கொண்டு வந்தேன். அதன்பின் என் துயரால் அவன் துயரைச் சிறிது தணித்து அவன் எண்ணங் களைக் குழந்தைகள்பால் செல்லவிட்டேன். குழந்தைகள் துயரம் பெரிய குழந்தைகளின் வாய்விடாத் துயரம் ஒருபுறம், சிறு குழந்தையின் துயரறியா மலைப்பு, மறுபுறம், இரண்டுமே அவனுக்குப் புதுத் துயர் தந்து கவலையும் பொறுப்பும் ஊட்டி முதல் துயரைத் தாங்கும் வலுத் தந்தன. அவன் துயரமுற்றும் அச்சமயம் குழந்தைகள் பற்றிய துயரமாக உருகி ஓடின. அடங்கிக் குமுறிய துன்பவெள்ளம் பீறிட்டுப் பாய்ந்தோடிற்று.
என் ஆறுதல் பெரும்பகுதி சொல்லில் அமைய முடிய வில்லை. நான் நண்பனுடனிருந்தேன். சிறு செய்திகளில் கவனம் திருப்ப முயன்றேன். அவனும் அறிவான், அது என் நட்பின் சூழ்ச்சி என்று. ஆனால் சூழ்ச்சிகள் என்று தெரிந்தும் அச்சமயம்